Friday, 30 March 2012

வந்துவிட்டது செயற்கை கண்கள்!

Posted On March 30,2012,By Muthukumar
கண் பார்வை என்பது வாழ்க்கைக்கான ஒளி போன்றது. பார்வையின்மையால் பாதிக்கப்படுவோரின் எதிர்காலம் இருண்டு போகும் என்பது நிதர்சனம். விபத்துகளில் கை,கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால்களை கொடுத்துள்ள நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் இன்னும் கண் பார்வை இல்லாதவர்களுக்கு செயற்கை கண்களை கொடுக்கவில்லை.
இந்த குறையை நிவர்த்தி செய்ய ஒரு செயற்கை கண் கருவியை கண்டுபிடித்திருக்கிறார் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் வெய்ல் மருத்துவ கல்லூரியின் நரம்பியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான ஷீலா நீரென்பெர்க்.
பிம்பங்களை கவர்ந்து கிரகிக்கும் `என்கோடர்' மற்றும் பிம்பத்தின் தகவல்களை மூளைக்கு எடுத்துச்செல்லும் `ட்ரான்ஸ்டியூசர்' என இரு பகுதிகளை கொண்டது இந்த செயற்கை கண் கருவி. அடிப்படையில், சேதமடைந்த விழித்திரையின் செயல்பாட்டினை செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த கருவிக்கு `விழித்திரை செயற்கை கருவி' என்று பெயர்.
பொதுவாக, கண்கள் பார்க்கும் பிம்பங்களின் தகவல்கள் விழித்திரையிலுள்ள `போட்டோ ரிசெப்டர்' என்னும் உயிரணுக்கள் மூலம் சேகரிக்கப்படும். பின்னர் அவை ரசாயன சமிக்ஞைகளாக மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, மூளையிலுள்ள `காங்க்ளியான் உயிரணுக்கள்' மூலம் புரிந்துகொள்ளப்படும். இது கண் பார்வைக்கு தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வுகள்.
ஆனால், கண் பார்வை இல்லாதவர்களின் விழித் திரைகள் சேதமடைந்திருக்கும். இதனால், பிம்பங்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதும், அவை மூளைக்கு எடுத்துச்செல்லப்படுவதும் தடைபடுகிறது.
இந்த இரு உயிரியல் நிகழ்வுகளையும் மேற்கொள்ளும் வண்ணம் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கருவி உருவாக்கப்பட்டுள்ளது. விழித்திரையின் `போட்டோ ரிசெப்டர்' உயிரணுக்களின் வேலையை `என்கோடர்' கருவியும், சேகரிக்கப்பட்ட தகவல்களை மூளையின் காங்க்ளியான் உயிரணுக்களுக்கு எடுத்துச்செல்லும் வேலையை `ட்ரான்ஸ்டியூசரும்' செய்கின்றன.
இந்த செயற்கை கண் கருவியை கொண்டு, முதற்கட்ட பரிசோதனை எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளால் ஒரு குழந்தையின் முகத்தை தெளிவாக பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், முந்தைய செயற்கை கண் கருவிகளால் பிரகாசமான வெளிச்சம் மற்றும் கோடுகளை மட்டுமே பார்க்க முடிந்தது. சுவாரசியமாக, நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கண் கருவியால் ஒரு குழந்தையின் முழு முகத்தையும் தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது. ஒரு செயற்கை கண் கருவியால் முகம் பார்க்க முடிவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, இந்த ஆய்வின் நோக்கம் மூளையுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை கண்டறிவதும், மூளையின் மொழியை புரிந்துகொள்வதும். இந்த நோக்கம் முழு வெற்றியடையும் பட்சத்தில் காது கேளாமை மற்றும் இன்னபிற நரம்பியல் குறைபாடுகளையும் சரிசெய்து விட முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
எலிகளின் மீதான ஆய்வில் முழு வெற்றியடைந்துள்ள இந்த செயற்கை கண் கருவி, மனிதர்களுக்கும் பார்வை அளிக்கும் நாள் இன்னும் சில வருடங்களிலேயே வந்துவிடும் என்று நம்பிக்கை அளிக்கிறார் நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்.
செயற்கை கை, கால்கள் போல செயற்கை கண் கருவியின் வருகை, விபத்துகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை அவர்களுக்கு முழுமையாக மீட்டெடுத்து தந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

No comments:

Post a Comment