Friday, 30 March 2012

பெற்றோரை நேசிப்பவரா நீங்கள்?

Posted On March 30,2012,By Muthukumar


பாசம் கொட்டி வளர்த்த பெற்றோரை அவர்களின் முதிர்வயதில் கண்டு கொள்ளாமல் போகும் பிள்ளைகள் இப்போது அதிகரித்திருக்கிறார்கள். `சேச்சே... நானெல்லாம் அப்படி இல்லை. என் பெற்றோர் தான் என் உயிர்' என்று உங்களில் பலர் சொல்லக்கூடும்.
அப்படியானால் நீங்கள் பின்வரும் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்.
பணி ஓய்வு, நோய் அவர்களில் ஒருவர் மரணம் போன்ற பிரச்சினையான கால கட்டங்களில் நான் என் பெற்றோருக்குத் துணையாக நிற்பேன்.
என் பெற்றோர் இளவயது வரையிலும் வேண்டியமட்டும் என்னை கவனித்தார்கள். இப்போது இது என் முறை. நான்தான் அவர்களை கவனிக்கவேண்டும். அவர்களின் தேவையறிந்து நான் செயல்படுவேன்.
அவர்கள் இதுவரை செய்த எல்லாவற்றிற்காகவும் நான் நன்றியுடன் இருப்பேன்.
அவர்களோடு நான் அதிக நேரம் செலவிடுவேன். அவர்களுக்கு நான் தரும் உணவில் என் அன்பும் கலந்திருக்கும்.
என் மழலைப்பருவம், குழந்தைப்பருவம், இளம் பருவங்களில் பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் என்னைப் படிப்படியாக அழைத்துச் சென்றதை நினைவில் வைத்து, அவர்களை அவர்கள் விரும்பும் இடத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்று வருவேன்.
மேற்சொன்ன அத்தனையையும் இதய சுத்தியோடு நீங்கள் சொல்லியிருந்தால் பெற்றோரின் தங்கமான பிள்ளை நீங்கள் தான்.
சிலர் தங்கள் பெற்றோரை பூவாகத் தாங்குகிறோம் என்பார்கள். அவர்கள் சொன்னதை நம்பி வீட்டில்போய் பார்த்தால் பெற்றோர் வீட்டின் உள் இருட்டறையில் அழுக்குக் கட்டிலில் கிழிந்த நாராய் கிடப்பார்கள்.
இதுவா கவனிக்கிற லட்சணம்? நேசிக்கிற லட்சணம்?
பெற்றோரை முதிர்வயதில் தள்ளி விடாதே என்கிறது, பைபிள்.
நிஜமாகவே பெற்றோரை நேசிப்பவர்கள்பின்வரும் 6 கேள்விகளுக்கு ஆம்- இல்லை பதிலளிக்கலாம்.
1. வயதான பெற்றோர் ஆலோசனைகளும் அறிவுரைகளும் எனக்கு இடைஞ்சலாக இருக்கிறது? (ஆம் / இல்லை)
2. வயதாகி விட்டதால் பெற்றோர் எரிச்சலூட்டு பவராகவும் மனச்சோர்வு அடைபவராகவும் உள்ளனர். இப்படிப்பட்ட நடத்தையை நான் புரிந்துகொண்டு அவர்களை அனுசரித்துப் பாகிறேன்.. (ஆம் / இல்லை)
3. நான் வளரும்போது எனக்கான தேவைகளை என் பெற்றார் தீர்மானிக்கிறார்கள். நான் வளர்ந்த பிறகு எனது விருப்பங்களை நானே முடிவு செய்கிறேன். சில சமயங்களில் மட்டும் அவர்களிடம் ஆலோசிக்கிறேன். (ஆம் / இல்லை)
4. எனக்கு வேலைகள் அதிகமாக இருந்தாலும், என் பெற்றோருக்காக நேரம் ஒதுக்கி, அவர்களுடைய எல்லா தேவைகளையும் கவனித்துக் கொள்கிறேன். (ஆம் / இல்லை)
5. எனக்கு மன அழுத்தம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் என் பெற்றோரிடம் ஆலோசனை பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். (ஆம் / இல்லை)
6. என் பெற்றோரை நான் நேசிக்கிறேன் என்பதை அவர்களிடம் வெளிப்படுத்துகிறேனா? (ஆம் / இல்லை)
7. என் வாழ்க்கைத் துணையை தேட என் பெற்றோர் உதவுவதாகக் கூறினால், நானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன் என்று அவர்களிடம் கூறி விடுவேன். (ஆம் / இல்லை)
8. என்னைப் போலவே என் லைப் பார்ட்னரும் என் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொள்வேன். (ஆம் / இல்லை)
9. பெற்றோருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டால் எரிச்சலாவேன். (ஆம் / இல்லை)
10. குழந்தைகளை வளர்ப்பது விஷயமாய் என் பெற்றோரின் ஆலோசனையையும் கேட்கிறேன். (ஆம் / இல்லை)
இப்போது நீங்கள்விடை சொல்லும் நேரம். விடை எழுதும்போதே நான் என் பெற்றோருக்கு எப்படிப்பட்ட பிள்ளையாக இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள். குறைகள் உங்கள் பக்கம் இருந்தால் இப்போதே அதை மாற்றிக்கொண்டு பெற்றோருக்கு அன்பான பிள்ளைகளாக இருக்க தீர்மானியுங்கள்.

No comments:

Post a Comment