- `உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?'
- `என்ன விஷயம்?' என்று நாம் கேட்பதற்குள்..!
"முன்பெல்லாம்
அன்றாட வேலை முடிந்து களைத்துபோகும் ஆண்கள்தான் கொஞ்சம் மது அருந்திவிட்டு
வீட்டுக்கு செல்வார்கள். இப்போது பெண்களும் ஆண்களோடு சேர்ந்து அந்த
பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள். அலுவலக வேலையை முடித்துவிட்டு சக
நண்பர்களோடு அமர்ந்து மனம் விட்டு பேசியபடியே, கொஞ்சம் `சில் பீர்`
போட்டுவிட்டு, அலுவலக டென்ஷனை எல்லாம் `பாரிலே` தொலைத்துவிட்டு, ஹாயாக வீடு
திரும்புகிறார்கள். அந்த காட்சியை மாலை நான்கைந்து மணிக்கே சென்னை நகர
பார்களில் உங்களால் காண முடியும்..'' - என்றது அந்த தகவல்.
`புத்தாண்டு
கொண்டாட்டத்தில் எக்கச்சக்கமாய் `அடித்து', மாநிலத்தில் மொத்த மது
விற்பனையை அதிகரிக்க செய்த மக்கள் இப்போது, அதை ஒரு அன்றாட
தேவையாக்கிவிட்டார்களோ' என்ற கவலையோடு அந்த பார் உள்ளே எட்டிப் பார்த்தோம்!
நமக்கு கிடைத்த தகவல் உண்மைதான். 25 முதல் 60 வயது வரையிலான ஆண்கள் கையில்
`கப்` நிரப்பி வைத்திருந்தார்கள். அவர்களோடு 15,20 பெண்கள்! அனேகமாய் இளம்
வயது. நாலைந்து பெண்கள் நாற்பதைக் கடந்து, ஐம்பதைத்தொடும் வயதுகளில்!
சாலை
சந்தடி எதுவும் உள்ளே கேட்கவில்லை. உள்ளே இருந்தவர்கள் ஒரு ஆனந்த
உலகத்திற்குள் சஞ்சரிப்பதுபோல் காணப்பட்டார்கள். வெளியே இரவும், பகலும்
உரசிக் கொள்ளும் மாலை மயங்கும் நேரம். உள்ளேயும் அப்படித்தான். ஆனால்
வெளிச்சத்தை விட இருட்டின் ஆதிக்கம் உள்ளே கொஞ்சம் அதிகம். அழகழகான
இருக்கைகள். இருக்கைகளைவிட அழகான பெண்கள் அதில் உட்கார்ந்திருந்தார்கள்.
இசை ஓடிக் கொண்டிருந்தது. எம்.ஆர்.சி.நகர் `பி பாரில்' இந்த `அபூர்வ'
காட்சியை நாம் கண்டோம்.
நாம்
உட்கார்ந்த இருக்கைக்கு எதிர்புறத்தில் இருபத்தைந்து வயதுக்கு மிகாத ஐந்து
பேர். அதில் இரண்டு பேர் பெண்கள். பெண்களை நடுவில் உட்காரவைத்து, மூன்று
இளைஞர்களும் சுற்றி அமர்ந்திருந்தனர். இரண்டு பெண்களின் கைகளிலும் பீர்
நிரப்பிய கோப்பைகள்.
பேசிக்கொண்டே,
ஆல்கஹால் தன்மை அதிகம் கொண்ட ஏதோ ஒரு வகை மதுவை அந்த இளைஞர்கள் இருவரும்
பருகிக் கொண்டிருந்தார்கள். இரண்டு ரவுண்டை அவர்கள் தாண்டியபோது அவர்கள்
பேச்சைக் குறைத்து மவுனமானார்கள். ஆனால் முழு கோப்பையையும் காலி செய்தபோது
அந்த பெண்கள் இருவரும் பேசத் தொடங்கினார்கள். பேசினார்கள்.. பேசினார்கள்..
பேசிக்கொண்டே இருந்தார்கள்! இறுக்கமாகிவிட்ட இளைஞர்கள் கம்முன்னு கேட்டுக்
கொண்டிருந்தார்கள்.
`மது
பற்றி நம்மிடம் மனம் விட்டுப்பேச எந்த பெண் கிடைப்பார்' என்ற நமது
தேடுதலுக்கு விடை கிடைத்தது. மாடர்ன் உடையில் தனிமை யில் கலக்கலாக அமர்ந்து
ஒயின் பருகிக்கொண் டிருந்த 30 வயது பெண்ணை அணுகினோம். `பலமாக' கைகுலுக்கி,
`உற்சாகமாக' பேசத் தொடங்கினார்.
அவரது
பேச்சின் தொடக்கத்திலே `சூடு' பறந்தது. "நம் நாடு, இந்த நாட்டில்
வசிக்கும் நாம் எல்லோருமே முரண்பாடானவர்கள். செக்ஸ் பற்றி பேசவே
கூச்சப்படுவதுபோல் காட்டிக் கொள்வோம். ஆனால் உண்மை என்ன? செக்சில் அதிகமாக
ஈடுபடுகிறவர்கள் நாம்தான்! குழந்தைகளை பெற்றுக்கொள்வதிலும் உலகிலே
முதலிடத்திற்கு முன்னேற வழி இருக்கிறதா என்றும் பார்க்கிறோம். செக்ஸ்
போன்று மதுவையும் பாவச் செயலுக்குரிய விஷயம் என்ற பட்டியலில்
வைத்திருக்கிறோம். ஆனால் நாளுக்கு நாள் நாம் அருந்தும் மதுவின் அளவு
அதிகரித்துக்கொண்டிருக்கிறது. என்ன முரண்பாடு பார்த்தீர்களா?'' என்று
கேட்டபடி இன்னொரு `சிப்' பருகினார்.
நேரம் செல்லச் செல்ல ஆண்கள் கூட்டம் அதிகரித்தது. அதில் பலர் ஜோடியாய் வந்தார்கள்.
`மது
அருந்துவதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?'- இந்த கேள்வியை நாம்
கேட்டதும், அந்த பெண்ணின் நண்பராக அறிமுகமான இளைஞர் பதில் சொல்லத்
தொடங்கினார். அவர் உதிர்த்தது தத்துவ ரகம்!
"இந்தியாவில்
பார்கள் அதிகமாகிவிட்டன. அதற்கு என்ன காரணம் என்று விளக்கமாக சொல்கிறேன்
கேளுங்க! மனிதர்கள் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினைகள், ஒரே டென்ஷன்.
வெளியே இருந்து உருவாகும் அந்த பிரச்சினைகளை அப்படியே தூக்கிக்கொண்டு
வீட்டிற்கு போனால், வீடு முழுக்க அந்த பிரச்சினை எதிரொலிக்கும். எல்லா
விஷயத்திற்கும் மனம் விட்டு பேசுவதுதான் தீர்வு. இங்கே பாருங்கள் எல்லோரும்
உட்கார்ந்து பேசுகிறார்கள். ஓரளவுதான் மது அருந்துகிறார்கள். ஆனால் நிறைய
பேசுகிறார்கள். அந்த பேச்சு எங்கள் மன சுமையை எல்லாம் இறக்கிவிடும்.
அமைதியாக வீட்டிற்கு சென்று தூங்கி விடுவோம்.
நாங்கள்
நிறைய சம்பாதிக்கிறோம். நாங்கள் நிம்மதியாக வாழவேண்டும். நாங்கள் கடந்து
போன நேற்றை நினைத்து அழத்தயார் இல்லை. நாளை என்ற எதிர்காலத்தை நினைத்தும்
ஏங்கப்போவதில்லை. எங்கள் கையில் இருப்பது இன்று மட்டுந்தான். இந்த பொழுதை
நாங்கள் உற்சாகமாக கழிக்கவேண்டும். கழிக்கிறோம்..'' என்றவர் நம்மிடம்
கைகொடுத்து விட்டு, அந்த 30 வயது அழகுப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு
கிளம்பிப் போனார்.
மீண்டும்
நாம் அமைதியாக இருந்து நாலாபுறமும் பார்வையை செலுத்தினோம். ஆண்கள் மது
அருந்தும்போது நிறைய சைடு டிஷ்களையும் உள்ளே தள்ளினார்கள். பெண்கள் பீர்,
ஒயினை பருகினாலும் சைட் டிஷ்களில் கை வைக்கவே பயப்படுகிறவர்கள் போலவே
காணப்பட்டார்கள். அங்கே இருந்த பெரிய டெலிவிஷனில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
போட்டியில் தெண்டுல்கர் அவுட் ஆவதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிக்
கொண்டிருந்தார்கள். அது, மது அருந்துபவர்களை ஓரளவு பாதிக்கவே செய்தது.
அதைப் பார்க்க பார்க்க அவர்கள் அருந்தும் மதுவின் அளவு அதிகரித்துக்
கொண்டிருந்தது. இது ஒரு வியாபார `டெக்னிக்'.
பிசியாக இருந்த `பார் டெண்டரை' ஓரங்கட்டினோம். பெயரை எல்லாம் போடாதீங்க என்ற வேண்டு கோளோடு பேசினார்..
"இன்றைக்கு
காதல், நிச்சயதார்த்தம், கல்யாண முடிவு, விவாகரத்து முடிவுகள் போன்றவை
பார்களிலும் எடுக்கப்படுகிறது. பிறந்த நாள் பார்ட்டி, விவாகரத்து பார்ட்டி,
வியாபாரம், புரமோஷன் பார்ட்டி, ஊருக்கு போகிறதுக்கு பார்ட்டி, மனைவி
தாய்மை அடைந்தால் பார்ட்டி, குழந்தை பிறந்தாலும் பார்ட்டி.. என்று
எல்லாவற்றுக்கும் மது விருந்து வைக்கிறார்கள். அதற்காக ஆண்களும், பெண்களும்
பார்களில் கூடுகிறார்கள். வெற்றி என்றாலும் குடிக்கிறார்கள். தோல்வி
என்றாலும் குடிக்கிறார்கள். ஆண்களுக்கு ஏற்படும் எல்லா உணர்வுகளும்,
பிரச்சினைகளும் பெண்களுக்கும் ஏற்படுகின்றன. அதனால் அவர்களும் வந்து
போகிறார்கள். பார் டெண்டிங் என்ற பாடத்தை நாங்கள் படித்திருக்கிறோம்.
பார்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதால், படித்து முடித்த உடன் இப்போதெல்லாம்
எங்களுக்கு வேலையும் கிடைத்துவிடுகிறது..'' என்றபடி நடையை கட்டினார்கள்.
ஆறடி
உயரத்தில், நூறு கிலோ எடைக்கு குறையாமல், இருவர் வெளியே நின்றுகொண்டு
வருகிறவர்களையும், போகிறவர்களையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
மிரட்டுகிற மாதிரி தெரிந்த அவர்கள் இருவரும் பவுன்சர்களாம்! அதாவது
பாதுகாப்பாளர்கள். அவர்களிடம், `குடித்துவிட்டு வம்பு செய்த யாரையாவது
உங்கள் உடல் பலத்தைக்காட்டி வெளியே தூக்கி போட்டிருக்கிறீர்களா? என்று
கேட்டோம். "இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை..'' என்றார்கள்,
சற்று ஏமாற்றம் கலந்த குரலில்..! பார்களில் கூடும் கூட்டம் நம்மை கவலை
கொள்ளச் செய்கிறது.
மது அருந்தும் பெண்களுக்கு..
* பெண்களின் உடலில் தண்ணீர்தன்மை குறைவு. அதனால் போதை அவர்களுக்கு மெதுவாகவே ஏறும்.
*
மதுவின் போதைதன்மையை குறைக்கும் என்சைம்களின் அளவு பெண்களுக்கு குறைவு.
அதனால் போதைத் தன்மை அவர்கள் உடலில் அதிக நேரம் நிலைத்து நிற்கும்.
*
மாதவிலக்குக்கு முந்தைய சில நாட்களில் பெண்களின் உடலில் ஹார்மோன்
சமச்சீரற்றதன்மை ஏற்படும். அப்போது அவர்கள் மது அருந்தினால், இயல்புக்கு
மாறான சூழல் உடலில் ஏற்படும்.
*
கர்ப்பத்தடைக்காக சில பெண்கள் ஈஸ்ட்ரோஜன் அடங்கிய மாத்திரைகளை உண்பார்கள்.
அவர்கள் மது அருந்தினால் மதுவில் உள்ள ஆல்கஹால் அவர்கள் உடலைவிட்டு
நிதானமாகவே வெளியேறும்.
*அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் ஈரல் நோய், பான்கிரியாஸ் பாதிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை தோன்றும்.
மிதமாக அருந்தினால்..
`மிதமாக
மது அருந்துவது உடலுக்கு நல்லது' என்ற கண்ணோட்டத்தில் அவ்வப்போது உலகளாவிய
நிலையில் ஆய்வு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. "மிதமாக மது அருந்தினால்
உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். அதனால் இதயத்திற்கு
ஏற்படும் பாதிப்புகள் குறையும்'' என்று 50-க்கும் மேற்பட்ட ஆய்வுகள்
குறிப்பிட்டுள்ளன. சமீபத்தில் இந்த முடிவை உறுதி செய்திருப்பது, `நியூ
இங்கிலாந்து ஜேனல் ஆப் மெடிசின்' ஆகும்.
மிதமாக
குடிப்பவர்களுக்கு இதய தமனிகளில் ஏற்படும் பிரச்சினைகளும், ரத்தம்
கெட்டியாவதால் உருவாகும் இஸ்கெமிக் ஸ்ட்ரோக்கும் ஏற்படும் வாய்ப்பு 40
முதல் 70 சதவீதம் குறைவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதில்
குறிப்பிடத்தக்க விஷயம், அளவான மது ரத்தம் கெட்டியாவதை தடுக்கிறது. உடலில்
நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கிறது. அதே நேரத்தில் அளவுக்கு
அதிகமான மது, பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. குடி குடியை கெடுக்கும்.
எதில், எவ்வளவு போதை..?
பீர்
கோதுமை,
சோளம், பார்லி போன்ற தானியங்களை லேசாக முளைவிடவைத்து, அதில் இருக்கும்
ஸ்டார்ச்சை எடுத்து புளிக்கச் செய்து பீர் தயாரிப்பார்கள். 4 முதல் 8
சதவீதம் ஆல்கஹால் இதில் உள்ளது.
பிராந்தி
ஆப்பிள்,
பீச், ப்ளம், செர்ரி போன்றவைகளை ஊறவைத்து, தயாரிக்கப்படுகிறது. இதில் 40
முதல் 60 சதவீதம் போதை தரும் ஆல்கஹால் இருக்கிறது. இது எவ்வளவு காலம்
வைத்திருந்து தயாரிக்கப்படுகிறது, என்பதற்கு தக்கபடி தரத்தை
நிர்ணயிக்கிறார்கள். விலையையும் நிர்ணயிக்கிறார்கள்.
ரம்
கரும்புச்
சாறு, கரும்பில் இருந்து உருவாகும் மோலாசஸ் போன்றவைகளை புளிக்கவைத்து,
வடிகட்டி ரம் உருவாக்கப்படுகிறது. தயாரிப்பு சூழல், நாள்பட்ட நிலை,
ஆல்கஹாலின் அளவு போன்றவைகளுக்கு தக்கபடி தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 37
முதல் 55 சதவீதம் வரை இதில் ஆல்கஹால் உள்ளது.
விஸ்கி
தானியங்களை
வேகவைத்து, புளிக்கச் செய்து விஸ்கி தயாரிக்கிறார்கள். முதலில் இதை மர
பீப்பாய்களில் பாதுகாப்பார்கள். நாள்பட்ட பின்பு இரு முறை வடிகட்டி
எடுப்பார்கள். இதன் மூலப் பொருளாக சோளம் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.
ஸ்காட்லாந்தில் உருவாக்கப்படுவது, ஸ்காட்ச் விஸ்கி. இந்த வகைகளில் 40
சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது.
ஷாம்பெய்ன்
வடகிழக்கு
பிரான்சில் உள்ள ஷாம்பெய்ன் என்ற நகரில் தயாரிக்கப்படும் ஸ்பார்கிளிங்
ஒயினுக்கு இந்த பெயரை சூட்டியிருக்கிறார்கள். மூலப் பொருளான ஊறலை புளிக்கச்
செய்து, வடிகட்டி இதனை மிகக் கவனமாக தயாரிக்கிறார்கள். இதனை தயாரிக்க பல
மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஒயின்
திராட்சை
சாறை புளிக்கவைத்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. திராட்சை சாறுடன்,
சர்க்கரை, ஈஸ்ட் செயலாக்கம் செய்யும்போது இது உருவாகிறது. எந்த அளவிற்கு
பழமையானதோ அந்த அளவிற்கு அதன் தரமும், சக்தியும் இருக்கும். ஒயினில் 8
முதல் 16 சதவீதம் ஆல்கஹால் உள்ளது.
ஓட்கா
மணம்,
நிறம், ருசியற்ற மது. இதில் 40 முதல் 50 சதவீதம் ஆல்கஹால் இருக்கிறது.
சோளம், கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவைகளை புளிக்கவைத்து கிடைக்கும்
பானத்தில் இருந்து ஓட்கா தயாரிக்கிறார்கள்.
நன்றி-தினத்தந்தி