Sunday, 15 January 2012

குழந்தை நலன்: போட்டி, பொறாமையாக மாறும்போது…

Posted On Jan 15,2012,By Muthukumar
குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும்.
பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல் பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.
குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான் மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தை களின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும்.
குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளை களைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.
குழந்தைகளின் குறைகளை திருத்தவும், நிறைகளை பாராட்டவும் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பாராட்டுவதும், இன்னொரு குழந்தையை குறை சொல்வதும் கூடாது. அதை தனித் தனியாக செய்ய வேண்டும். `உன்னைவிட அவன் ஒசத்தி' என்ற தொனியில் செயல்படக்கூடாது. இரு குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பெற்றோர் தங்கள் மனதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். வெளிக்காட்டினால் அது குடும்பத்தையே அழித்துவிடக்கூடும்.
உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றிருக்கும் சகோதரர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இருவரும் போட்டி யாளர்களாக வளர்க்கப்பட்டார்கள். பின்பு தங்களுக்குள் பொறாமைக்காரர்களாக மாறினார்கள் என்பதை உலகே அறியும். "சகோதரர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பார்கள் என்ற நிலை மாறி இரண்டு சத்துருக்களை அல்லவா நான் பெற்றுவிட்டேன்'' என்று அவர்களுடைய தாய் கோகிலா அம்பானி புலம்பியது நாடறியும்.
புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஷோபா டே இது பற்றி கூறும்போது, "இது ஒரு முற்றிவிட்ட மனோவியாதி என்பது தான் உண்மை. வளர்ச்சி என்பது ஆரோக்கியமானதாகவும், மனதுக்கு மகிழ்ச்சியளிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். பொறாமையில் ஏற்படும் வளர்ச்சி எப்போதும் தேவையற்ற டென்ஷனையும், நரம்பு தளர்ச்சியையும் தான் தரும். உடன்பிறந்தவர்களுக் குள் பொறாமை என்பது, அந்த குடும்பத்துக்கே ஒரு சாபக்கேடு'' என்றும் கூறுகிறார்.
எல்லா குழந்தைகளுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.
குடும்பங்களில் எப்போதும் சிறிய குழந்தைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பெரிய குழந்தை பல விஷயங்களில் ஒதுக்கப்படுகிறார்கள். தனக்கும் பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக சில குழந்தைகள் தங்களை காயப்படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால், பெரிய குழந்தைகளின் கடமைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி குடும்பத்தில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு பொறாமை குணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அன்பும், சகிப்புதன்மையும்தான் அனைத்திற்கும் அடிப்படை.

No comments:

Post a Comment