Sunday, 18 March 2012

தீக்காயம் ஏற்பட்டால்…

Posted On March 18,2012,By Muthukumar
சமையல் செய்யும்போது தீயால் விரலைச் சுட்டுக் கொண்டால், அதற்கென்று உள்ள களிம்பையோ, மசியையோ, நெய்யையோ தடவுகிறோம். இதெல்லாம் பழைய முறைகள். ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட புதிய முறை எளிமையானது. அதாவது தண்ணீரில் விரலை வைத்துக் குளிரச் செய்வது. ஐஸ் இருந்தாலும் வைக்கலாம். வெப்பத்தை விரைவில் அப்புறப்படுத்துவதே முதல் உதவி.
உடலில் தீப்புண் எவ்வளவுக்கு எவ்வளவு பரவலாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு விபத்தின் கொடூரம் அதிகம். ரத்த நாளங்களும், தசை நார்களும் சிதைவுபட்டு, நீர் போன்ற திரவம் உடலில் இருந்து வெளியே வருகிறது. அதனால் ரத்தம் சுண்டிப் போய் திரவத் தன்மை குறைந்து கெட்டியாகிறது.
இப்படி அதிகக் கனமுள்ள ரத்தத்தை உடலில் செலுத்த இதயம் மிகக் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. அதனால், தீப்புண்ணுக்கு இரையானவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அப்புறப்படுத்துவது அவசியம். உடலில் மூன்றில் ஒரு பாகமோ அல்லது அதற்கு மேற்பட்டோ தீயால் பாதிக்கப்பட்டால் அந்த நபர் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார் என்று கூறலாம்.
தீப்புண்கள் கிருமிகள் இல்லாதவை. எனவே அசுத்தமான கை படக் கூடாது. தீப்பற்றிய துணி புண்ணில் ஒட்டிக் கொண்டிருந்தால் அதைப் பிய்க்கக் கூடாது. துணி, தீயால் கிருமிகள் இல்லாமல் சுத்தப்படுத்தப்பட்டிருக்கும். நகைகள், கடிகாரம் போன்றவற்றைக் கழற்றிவிட வேண்டும். பிறகு எடுத்தால் வீக்கத்தினால் வலி அதிகம் ஏற்படும்.
தீ விபத்துக்கு உள்ளானவர்கள், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையே முதல் மருந்து. உடல் ஏதாவது திடீர் விபத்துக்குள்ளானால் அந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக ரத்தம் பாயும். தோல், சதைப் பாகங்கள், ஜீரணக் குழாய் போன்றவற்றில் ரத்த ஓட்டம் குறையும்.
அதனால்தான் தீ விபத்துக்குள்ளானவர்களின் உடல் வெளுத்தும், சில்லென்றும், ஈரமாகவும் இருக்கும். செரிமான சக்தியும் இருக்காது. இவர்களுக்கு, கடினமாக உள்ள உணவைக் கொடுக்கக் கூடாது. தாகம் எடுத்தால் தண்ணீர் அல்லது லேசான தேயிலைப் பானம் போன்ற நீராகாரம் மட்டுமே கொடுக்க வேண்டும்.
தீப்பிடித்துக் கொண்டதும் உதவிக்காக அங்குமிங்கும் ஒருவர் நடந்தால், அதனால் காற்றோட்டம் ஏற்பட்டு துணி முழுவதும் தீ பரவும். பக்கத்தில் இருப்பவர் உடனே தண்ணீரை ஊற்ற வேண்டும். சாதாரணமாக எல்லோரும் எண்ணுவது, உடனே ஒரு கம்பளியால் அல்லது ஜமுக்காளத்தால் போர்த்தித் தீயை அணைக்க வேண்டும் என்பது. அது தவறு!

No comments:

Post a Comment