Thursday, 22 March 2012

வந்துடுச்சு `செயற்கை இறைச்சி’!

Posted On March 22,2012,By Muthukumar
எதை எதையோ புதிது புதிதாக உருவாக்கும் விஞ்ஞான உலகம், இப்போது `செயற்கை இறைச்சி'யையும் தயாரித்து வியக்க வைத்திருக்கிறது.
ஆலந்தின் மாஸ்டிரிக்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் போஸ்ட், கால்நடை ஸ்டெம் செல்களில் இருந்து இந்த செயற்கை இறைச்சியை உருவாக்கியிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில், அதாவது அக்டோபர் மாதத்தில் இவர் உருவாக்கிய இறைச்சியால் ஆன `ஹாம்பர்கர்' தயாராகப் போகிறது.
செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட 3 ஆயிரம் இறைச்சிப் புரதப் பட்டைகளால் ஆன அந்த இறைச்சி பர்கர்தான் இதுவரை தயாரிக்கப்பட்ட பர்கர்களிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்.
ஹெஸ்டன் புளூமென்தான் என்ற புகழ்பெற்ற சமையல்காரரால் தயாரிக்கப்படப் போகும் அந்த இறைச்சியை உண்ணவிருக்கும் அதிர்ஷ்டசாலி (?) யார் என்று தெரியவில்லை.
இந்தச் செயற்கை இறைச்சியை உருவாக்குவது தொடர்பான சவால்களை கடந்த ஆறாண்டுகளாக விஞ்ஞானிகள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். கால்நடைத் தசைகளில் இருந்து ஸ்டெம்செல்களை பிரித்தெடுப்பது, அவற்றை ஆய்வகத்தில் வளர்ப்பது, தசை இழைப் பட்டைகளாக உருவாக்கி, செயற்கைக் கொழுப்புச் செல்களுடன் சேர்த்து உண்ணத்தக்கதாக மாற்றுவது எல்லாமே கடினமான பணிகள்.
மேலும், இதற்கு நிஜமான இறைச்சியைப் போல இளஞ்சிவப்பு நிறம் கொடுப்பது, சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் ஏற்ற தன்மையில் கொண்டுவருவது, இறைச்சியைப் போல உணரவும், சுவைக்கவும் வைப்பது எல்லாம் பிற சவால்கள்.
உலகின் எதிர்கால உணவுத் தேவைக்கு இச்செயற்கை இறைச்சி சரியான தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கூறும் அதேநேரம், மக்கள் இதை எந்த அளவு ஏற்றுக்கொள்வார்கள், இது என்னென்ன பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

No comments:

Post a Comment