Saturday, 28 January 2012

மூளையில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் புதிய கருவி!

Posted On Jan 28,2012,By Muthukumar


இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால், விபத்துகள் நேரும்போது தலையில் அடிபட்டு மூளைக் காயங்கள் ஏற்படும் ஆபத்து மிக அதிகம்.
இதுபோன்ற நிலையில் ஏற்படும் ஆபத்துகளில் ஒன்றுதான் செரிப்ரல் வாசோஸ்பாசம். வெடி விபத்துகளால் பாதிக்கப்படும் ராணுவ வீரர்கள் மற்றும் அனியூரிசம் எனப்படும் இதய நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகள் போன்றோருக்கு இந்த பாதிப்பு அதிகம். இந்த மூளைக் கோளாறு, ரத்த நாளங்கள் திடீரென்று சுருங்குவதால் ஏற்படும் ஒரு ஆபத்தான கோளாறு. அதாவது ஒரு தண்ணீர் குழாயை அழுத்தி பிடிப்பது போல ரத்த நாளங்கள் அழுத்தப்படும்போது ரத்த நாளங்களுக்குள் அழுத்தம் அதிகரிக்கிறது.
இதனால் ரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவும் குறைந்து போகிறது. இத்தகைய ஒரு கோளாறு ஒரு விபத்து நிகழ்ந்து பல நாட்களுக்கு பின்னர்கூட ஏற்படலாம். இந்த கோளாறினை கண்டறிய தற்போது அல்ட்ரா சவுண்டு கருவி பயன்படுத்தப்படுகிறது. இதில் சிக்கல் என்னவென்றால், இந்த பரிசோதனையை ஒரு தேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரால் மட்டுமே செய்ய முடியும்.
எல்லாமே எந்திர மயமாகிவிட்ட இந்த காலத்தில், இந்த பரிசோதனையையும் எந்திரமயமாக்கிவிட வேண்டும் என்று முயற்சித்த பிசியோசானிக்ஸ் என்னும் அமெரிக்க நிறுவனத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதாவது செரிப்ரல் வாசோஸ்பாச கோளாறினை ஒரு தொழில்நுட்ப வல்லுனரின் உதவியின்றி கண்டறியும் வண்ணம், இசை கேட்க பயன்படுத்தப்படும் `ஹெட்செட்' போன்ற ஒரு அல்ட்ராசவுண்டு கருவியை தயாரித்துள்ளது இந்த நிறுவனம்.
சோதனையின் போது இந்த கருவியில் இருந்து வெளியாகும் பல அல்ட்ரா சவுண்டு கதிர்கள் தலைக்குள் ஊடுருவிச் செல்கின்றன. பின்னர், இந்த கருவியிலிருக்கும் பிரத்தியேகமான அல்காரிதம் மூளைக்கு ரத்தத்தை கொண்டுசெல்லும் மைய ரத்த நாளத்தை கண்டறிகிறது. அதன்பிறகு, கருவியிலிருந்து வெளியாகும் அல்ட்ரா சவுண்டு கதிர்கள் அந்த மைய ரத்த நாளத்தில் மட்டும் பாய்ச்சப்பட்டு அதன் ரத்த ஓட்டம் கணக்கிடப்படுகிறது. பின்னர், இந்த ஹெட்செட் கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு எந்திரம் மைய ரத்த நாளத்திலுள்ள ரத்த ஓட்டத்தின் வேகம் போன்ற விவரங்களைக் காட்டுகிறது.
இதயத் துடிப்பை கண்காணிக்கும் கருவியை போலவே மூளையின் மைய ரத்த நாளத்தின் ரத்த ஓட்டத்தையும் கண்காணிக்க ஒரு கருவியை கண்டறிய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்கிறார் இதனை உருவாக்கிய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நரம்பு அறுவை சிகிச்சை நிபுணரும், இந்த நிறுவனத்தின் பங்கு
தாரர்களில் ஒருவருமான மைக்கேல் க்ளியட்.
மூளையின் மைய ரத்த நாளத்தின் ரத்த அழுத்தத்தை கண்டறியும் இந்த புதிய கருவியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தலைக்குள் இருக்கும் அழுத்தத்தை கண்டறியும் மற்றொரு அல்காரிதத்தையும் உருவாக்கி வருகிறது பிசியோசானிக்ஸ் நிறுவனம் என்பது மகிழ்ச்சியான மற்றொரு செய்தி.
ஏனென்றால், தற்போது தலையில் உள்ள அழுத்தத்தை கண்டறிய வேண்டுமானால் மண்டை ஓட்டில் ஒரு துளையை போட்டாக வேண்டும். மாறாக, இந்த புதிய கருவியை பயன்படுத்தினால் அந்த சிக்கலை தவிர்த்து, வலியில்லாமல் பரிசோதனை செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment