Tuesday, 10 April 2012

நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் அரிசி சாதம் by vayal


Posted On April 10,2012,By Muthukumar
எந்த உணவு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று வீட்டிலிருக்கும் பெரியவர்களைக் கேட்டால் இட்லி, தோசை, பிஸ்ஸா, பர்கர், பாஸ்தா என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள். `கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் செய்த கூழ் குடிப்பதிலும், கைக்குத்தல் அரிசி சாதம் சாப்பிடுவதிலும் இருக்கும் சுகம் வேறெதிலும் வராது' என்றுதான் சொல்வார்கள்.
நம் வீட்டு பெரியவர்கள் மட்டுமல்ல, நாமும் கூட அப்படிச் சொல்லும் காலம் விரைவில் வந்துவிடும் போலிருக்கிறது. `ஆமாம், உண்மைதான்' என்று இந்த கருத்தை ஆமோதிப்பதைப் போல்தான் இருக்கிறது, வெள்ளை அரிசி சாதம் உண்பதற்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்குமான தொடர்பு குறித்த சமீபத்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள, ஹார்வர்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெள்ளை அரிசி சாதம் உண்பதற்கும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்குமான தொடர்பு குறித்து நடத்தப்பட்ட 4 ஆய்வுகளின் முடிவுகள் மறு ஆய்வு செய்யப்பட்டன.
இந்த 4 ஆய்வுகளில், ஆசிய நாடுகளான சீனா மற்றும் ஜப்பானில் இரண்டும், மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இரண்டும் நடத்தப்பட்டன. மேற்கத்திய மக்களுடன் ஒப்பிடுகையில் அரிசி சாதத்தை அதிகமாக சாப்பிடும் பழக்கமுள்ள ஆசிய நாட்டவர்களில், அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்துக்குமான தொடர்பு மேலும் உறுதியாக இருக்கிறதா என்பதை கண்டறிவதே இந்த மறு ஆய்வின் நோக்கமாகும்.
4 முதல் 22 வருடங்களாக, நீரிழிவு நோய் இல்லாத சுமார் 3 லட்சத்து 52 ஆயிரம் மக்களின் அரிசி சாதம் உண்ணும் விவரங்களை சேகரித்து பரிசோதனைகளை செய்தனர். இந்த நான்கு ஆய்வுகள் நடத்தப்பட்ட காலங் களிலேயே, ஆய்வில் பங்குபெற்ற சுமார் 13 ஆயிரத்து 284 பேருக்கு டைப் 2 நீரிழிவு ஏற்பட்டது தெரியவந்தது.
அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்துக்குமான தொடர்பு இரு பிரிவுகளிலும் இருந்தாலும், ஆசிய நாட்டவர்களுக்கே இந்த தொடர்பு மிகவும் உறுதியாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், இந்த தொடர்பானது ஆண்களை விட பெண்களிலேயே மிகவும் உறுதியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில், தொடர்ந்து அரிசி சாதம் சாப்பிட்டு வருபவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.
மேலும், ஒரு நாளைக்கு இரண்டு வேளை அரிசி சாதம் சாப்பிட்டவர்களுடன் ஒப்பிடுகையில், மூன்று அல்லது நான்கு வேளை அரிசி சாதம் சாப்பிட்டவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று தெரியவந்தது. முக்கியமாக, ஒரு நாளைக்கு சாப்பிடும் அரிசி சாதத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும் அதிரிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.
`ஐயய்யோ, வெள்ளை அரிசி சாதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வந்துவிடுமா? அப்படியென்றால், இதை தவிர்க்க இப்பொழுது நான் என்ன செய்வது?' என்று அதிர்ச்சியாகும் பலரில் நீங்களும் ஒருவரென்றால் கவலை வேண்டாம் என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ப்ரூஸ் நீல்.
ஏனென்றால், அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்திற்கும் ஒரு உறுதியான தொடர்பு இருக்கிறது என்றுதான் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதே தவிர, அரிசி சாதம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது என்று கண்டறியப்படவில்லை என்று நம் வயிற்றில் பாலை வார்க்கிறார் பேராசிரியர் நீல்.

அதெல்லாம் சரி, வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவதற்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு?
வெள்ளை அரிசியின் கிளைசீமிக் இன்டெக்ஸ் (glycemic index) அளவு 64. அதாவது, 64/100. இது பிற உணவுகளைவிட மிகவும் அதிகம். உதாரணமாக, ஐஸ்கிரீமின் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு 61, ஆரஞ்சு ஜூஸின் அளவு 50 என்கிறது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரமொன்று.
மாவுச்சத்துக்களை குளூக்கோஸாக மாற்றும் திறனின் அளவுகோள்தான் கிளைசீமிக் இன்டெக்ஸ் என்பது. அரிசி மற்றும் இதர உணவுகளிலுள்ள குளூக்கோஸ் அல்லது சர்க்கரை, ரத்தத்தில் கலந்துவிடும். ரத்தத்தில் உள்ள குளூக்கோஸின் அளவு அதிகரித்தால் அதுதான் நீரிழிவு நோய்.
ஆக, வெள்ளை அரிசி சாதத்தை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தின் குளூக்கோஸ் அளவுகள் அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்கிறது அறிவியல்!
மேலும், இதற்கு முந்தைய ஆய்வுகளில் அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவு முறைகளுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்திற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக, அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள வெள்ளை அரிசியில் உள்ள போஷாக்குகள் `பிரவுன் ரைஸ்' என்றழைக்கப்படும் கைக்குத்தல் அரிசியில் இருப்பதை விட மிகவும் குறைவு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆக, `இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று' என்று திருவள்ளுவர் சொன்னதைப்போல, அதிக போஷாக்குள்ள கனி போன்ற கைக்குத்தல் அரிசி இருக்க, அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள காய் போன்ற வெள்ளை அரிசி நமக்கு எதற்கு என்று சொல்லாமல் சொல்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment