Posted On March 1,By Muthukumar |
நம் ஊரில், தங்கம் பெரும்பாலும் ஆபரணங்களாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜெர்மனியில் சமீபத்தில் `நானோ போன்' ஆக மாறியிருக்கிறது.
செல்போன் தெரியும். மைக்ரோ போன் கூட தெரியும். அதென்ன நானோ போன்?
கண்ணுக்கு
தெரியாத அளவில் மிகவும் சிறியதாக வடிவமைக்கப்பட்டு இருப்பவை மைக்ரோ
போன்கள். ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பகுதி.
இப்போது மைக்ரோ போனை விட மிக மிக நுண்ணிய, நானோ அளவிலான ஒரு போனை
ஜெர்மனியின் லுட்விக் மேக்சிமில்லியன் பல்கலைக்கழக ஆய்வாளர் அலெக்சாண்டர்
ஓலிங்கர் தலைமையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார்கள்.
வெறும்
60 நானோ மீட்டர் அகலமுள்ள இந்த நானோ போன் தங்கத்தால் ஆனது. ஒரு நானோ
மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பகுதி. இதுவரை உலகத்தில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள போன்களில், ஒலியை மிக மிக துல்லியமாக கவரக் கூடிய
விதத்தில் இந்த நானோ போன்களுக்கே முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரிதான், இந்த நானோ போனை எப்படி உருவாக்கினார்கள்?
முதலில்,
வட்ட வடிவமான தங்க நானோ துகள்கள் தண்ணீரில் மிதக்க வைக்கப்பட்டன. அதில்
ஒரு துகள் மீது லேசர் ஒளி பாய்ச்சப்படும்போதே, அதற்கு சில மைக்ரோ
மீட்டர்கள் தொலைவில் உள்ள மற்ற நானோ துகள்கள் மீது மற்றொரு லேசர் ஒளி சிறு
சிறு கற்றைகளாக விட்டு விட்டு பாய்ச்சப்பட்டது. இதனால் வெப்பமடைந்த நானோ
துகள்கள் அவற்றை சுற்றியுள்ள தண்ணீரை பாதிக்கவே, அழுத்தம் அல்லது ஒலி
அலைகள் உருவானது.
இதற்கிடையில்,
மற்றொருபுறம் லேசர் ஒளி பாய்ச்சப்பட்டுக் கொண்டிருந்த ஒரு நானோ துகள் பிற
நானோ துகள்களால் எழுப்பப்பட்ட ஒலி அலைகளுக்கு ஏற்ப அசைந்தாடுவது போல்
முன்னும் பின்னுமாக ஆடத் தொடங்கியது. இந்த ஒரு நானோ துகளின் ஆட்டம்
வெப்பத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர் மூலக்கூறுகளால் ஏற்பட்டதா என்பதை
தீர்மானிக்க பிற நானோ துகள்கள் ஏற்படுத்திய ஒலி அலைகளின் அலைவரிசை எண்
மாற்றப்பட்டது.
இவ்வாறு
அலைவரிசை எண் மாற்றப்பட்ட ஒவ்வொரு முறையும், லேசர் ஒளிக்கற்றை
பாய்ச்சப்பட்ட ஒரு நானோ துகளின் அலைவரிசை எண்ணும், பிற துகள்களின் அலைவரிசை
எண்ணும் ஒத்துப்போனது. அதுமட்டுமல்லாமல், தனியாக வைக்கப்பட்ட ஒரு நானோ
துகளின் ஆட்டமும் பிற நானோ துகள்கள் ஏற்படுத்திய ஒலி அலைகளின் திசையிலேயே
இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக, தனியாக வைக்கப்பட்ட ஒரு நானோ துகள் ஒன்றாக
இருந்த பிற நானோ துகள்களால் ஏற்படுத்தப்பட்ட ஒலி அலைகளுக்கு ஏற்பத்தான்
ஆடியது என்பது நிரூபணம் ஆனது.
மனித
காதுகளால் உணரப்படும் ஒலியில் இருந்து 60 டெசிபல்கள் (அதாவது, ஒரு
மில்லியனில் ஒரு பகுதி) குறைவான ஒலியை இந்த அதி நவீன நானோ போன் கொண்டு உணர
முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு குறைவான ஒலியை உணரும்
ஒரு ஒலிக் கருவியை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
ஆமாம், இந்த நானோ போனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
இந்த
நானோ போன் தொழில்நுட்பத்தைக் கொண்டு, மிக நுண்ணிய உயிர்களான வைரஸ்கள்
மற்றும் உடலின் உயிரணுக்கள் ஏற்படுத்தும் ஒலியைக் கூட துல்லியமாக கேட்கும்
காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பாளர்கள்.
உண்மைதான் என்று ஆமோதிக்கிறார் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின்
ஆய்வாளர் சாங்குவே யாங்!
மேலும்,
உயிரணுக்கள் அதிர்வது மட்டுமே மைக்ராஸ்கோப் மூலம் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவை ஏற்படுத்தும் ஒலிகளை யாரும் இதுவரை பதிவு
செய்யவில்லை. இதனை செயல்படுத்தும் ஒரு தொழில்நுட்பத்தை
கண்டுபிடித்திருக்கிறார்கள் என்கிறார் யாங்.
உயிரணுக்கள்
மற்றும் நுண்ணிய உயிரிகள் ஏற்படுத்தும் ஒலிகளை நானோ போன் கொண்டு பதிவு
செய்வதன் மூலம் அவற்றின் இயங்குதன்மை, குணாதிசயங்கள் மற்றும்
நோய்வாய்ப்படுவதால் உயிரணுக்கள் எப்படி மாற்றமடைகின்றன போன்றவற்றை
புரிந்துகொள்ள முடியும். ஆக, நானோ போன் வருகை மருத்துவத்துக்கும்,
ஆய்வுலகத்துக்கும் பேருதவியாக இருக்கும். அது மட்டுமல்லாமல், இனி
பாக்டீரியாக்கள், வைரஸ்கள் எல்லாம் என்ன பேசிக்கொள்கின்றன என்றும் இதன்
மூலம் ஒட்டுக் கேட்கலாம்.
No comments:
Post a Comment