Thursday, 8 March 2012

தாராளமாக தண்ணீர் குடிக்காவிட்டால் கல் தான்!


Posted On March 08,2012,By Muthukumar
உடலில் உள்ள பாகங்களில், மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு நிகரான முக்கியத்துவம் பெற்றது, சிறுநீரகம். ரத்தத்தை சுத்திகரித்து, கழிவுகளை வெளியேற்றும் இந்த உறுப்பின் பணி, அளவிடற்கரியது. பொதுவான காரணங்களால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படுவது போல, சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. புகை பிடித்தல், உடற்பயிற்சி இன்மை, மதுப் பழக்கம், உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என, பல காரணங்களை அடுக்கலாம்.
சிறுநீரக கல்: சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னையில் முக்கியமானது, கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன. இது, மிகச் சிறு துகள் அளவில் துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக் கூடும். பெரிய கற்கள் கூட, அறிகுறியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கற்களின் வெளிப்பரப்பு, முட்களைப் போல இருந்தால், அவை சிறுநீர் பாதையில் உராய்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியாகலாம். இவை பரம்பரை காரணமாக, போதிய நீர் குடிக்காததால் உருவாகலாம். அசைவ உணவை தவிர்ப்பது, போதிய நீர் குடிப்பது, சிறுநீர் பாதை நோய் தொற்று மற்றும் அடைப்புக்கு தாமதமில்லாத சிகிச்சையால், கல் உருவாவதை தவிர்க்கலாம்.
அறிகுறிகள்: இதன் முக்கிய அறிகுறி, வயிற்று வலி. சிறுநீர் பாதையில் வலது, இடது பக்க கீழ் முதுகு பகுதியில் வலி வந்து, விரைகள் வரை பரவலாம். வாந்தி, நீர்க்கடுப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீரின் வேகம் தடைபடுதல், காய்ச்சல் ஏற்படலாம். பெண்களை விட ஆண்களுக்கு, சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு, மூன்று மடங்கு அதிகம். இந்நோயாளிகள் தக்காளி, நெல்லி, முந்திரி பருப்பு, வெள்ளரி, கறுப்பு திராட்சையை தவிர்க்கலாம். பால், 250 மி.லி.,க்கு மிகாமல் எடுக்கலாம். எலுமிச்சை ஜூஸ், இளநீர் நிறைய குடிக்கலாம். முள்ளங்கி, வாழைத்தண்டு, சிறுநீர் பெருக்கியாக செயல்படுவதால், பெரும் பயன் உள்ளதாகக் கருத முடியாது. பார்லி, கொள்ளு, பாகற்காய், காரட் சேர்த்துக் கொள்ளலாம். ஒருவரின் சராசரி சிறுநீர் அளவு, ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரை இருக்கலாம். கல் உருவாகும் பிரிவினர், 2 லிட்டர் சிறுநீர் வெளியேறும் அளவு, 3 முதல் 4 லிட்டர், தண்ணீர் குடிக்க வேண்டும். 4 மி.மீ.,க்கு கீழ் உள்ள கற்கள், பெரும்பாலும் தானாகவே வெளியேறி விடுகின்றன. 6 மி.மீ.,யை விட பெரியவை, தானாக வெளியேறுவதில்லை. இதற்கு தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீர் சிக்கல்: புராஸ்டேட் சுரப்பி, ஆண்களுக்கே உரியது; இனப் பெருக்கத்துடன் தொடர்புடையது. இது, சிறுநீர் பாதையின் அடியில், சிறுநீர்த் தாரையின் முதற்பகுதியை சூழ்ந்துள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையில், சிறுநீர்த் தாரையை அமுக்குகிறது. இதனால், சிறுநீர் பாதை அடைபட்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் தேங்கும். அந்நிலையில், உடனடியாக அடைப்பை நீக்க வேண்டும்.
வயதானவர்களுக்கு சிறுநீர் சிக்கல் ஏற்படும்போது, ஆசன வாய்க்குள் விரல் விட்டு பார்த்தால், புராஸ்டேட் சுரப்பியின் இருபக்க மடல்கள் துருத்திக் கொண்டிருப்பதை உணரலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், முயற்சிக்கும்போது உடனடியாக சிறுநீர் வெளி வராதது, சிறுநீர் வெளி வருவதை கட்டுப்படுத்த முடியாதது, சிறுநீர் நின்று நின்று வருவது, நாட்கள் செல்லச் செல்ல, கிருமி தாக்கம் ஏற்பட்டு, சிறுநீர் தொற்றின் அறிகுறிகளாக, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் வலி தோன்றுவது என, பாதிப்பை ஏற்படுத்தும். புராஸ்டேட் எந்தளவு வளர்ந்துள்ளது, மலக்குடலின் சீதச்சவ்வை பாதித்துள்ளதா, புற்றுநோய் வளர்ச்சியா என அறிவது அவசியம். 50 வயதானவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு, "எண்டோஸ்கோபி' சிகிச்சை செய்யப்படுகிறது. முன்னதாக, வழக்கமான ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளுடன், ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் தேவைப்படும். மேலும், சிஸ்டோஸ்கோபி, பை உள்நோக்கல் சோதனையும் செய்யப்படும். இதன் மூலம், பாதிப்புக்கான வேறு காரணங்களையும் அறியலாம்.
டாக்டர் டி.ஆர்.முரளி,
சிறுநீரியல் துறை நிபுணர்,
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.

No comments:

Post a Comment