Sunday, 8 July 2012

புற்றணுக்களை கண்டறியும் நுண்ணிய வேகத்தடை கருவி!

Posted On July 8,2012,By Muthukumar
திருடர்களைப் பிடிக்கும் போலீஸ்காரர்களின் நிலைமை எப்படியோ தெரியாது. ஆனால் புற்றணுக்கள் தோன்றிய சிறிது காலத்திலேயே அவற்றை கண்டுபிடித்து தரும் மருத்துவக் கருவிகளைக் உருவாக்கும் விஞ்ஞானிகளின் பாடு திண்டாட்டம்தான். ஏனென்றால் புற்றணுக்களை தொடக்கத்திலேயே கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல!
உதாரணமாக, லட்சக்கணக்கான ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு மத்தியில் நல்ல பிள்ளை போல் சுற்றித்திரியும் பண்புடையவை புற்றணுக்கள். அவற்றை இனம் கண்டு அழிப்பதற்கு புத்தி சாதுர்யம் மட்டும் போதாது. ஆரோக்கியமான உயிரணுக்களை பாதிக்காத வண்ணம் புற்றணுக்களை அழிக்கும் லாவகமும் அவசியம்.
இந்த நோக்கத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு சோதனை கருவிகள் நம்மிடையே உண்டு என்றாலும், புற்றணுக்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து நோயாளிகளின் உயிரைக் காக்க மேலும் சக்திவாய்ந்த பரிசோதனைக் கருவிகள் அவசியப்படுகின்றன.
இந்த தலையாய பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்ல வந்திருக்கிறது மிகவும் சக்திவாய்ந்த, ஒரு புதிய கருவி. `நுண்ணிய வேகத்தடை கருவி' என்றழைக்கப்படும் இந்த கருவியை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தைச் சேர்ந்த இரு பொறியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மைக்ரோ ப்ளூயிடிக் கருவி வகையைச் சேர்ந்த இந்த புதிய கருவி புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் நுண்ணிய பொருட்களை இனம் பிரித்து கொடுக்கக் கூடியது. சாலைகளில் உள்ள வேகத்தடையைப் போல, மைக்ரான் (ஒரு மீட்டரில் பத்து லட்சத்தில் ஒரு பகுதி) அளவுள்ள வேகத்தடைகளைக் கொண்ட இந்த கருவி நுண்ணிய பொருட்களை அவற்றின் எடை, அளவு அல்லது இதர பண்புகளின் அடிப்படையில் பிரித்து கொடுக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேகத்தடை கருவியை கண்டுபிடித்துள்ள ஆய்வு மாணவர் ஜோர்க் பெர்னேட்டின் நோக்கம், தினசரி மருத்துவப் பரிசோதனைகளுக்கு உதவும் வகையில் ஓர் எளிமையான கருவியை உருவாக்குவதுதானாம்.
கோடிக்கணக்கிலான ஆரோக்கியமான ரத்த உயிரணுக்களுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டு உயிர் வாழும் தன்மையுடையவை சுழலும் புற்றணுக்கள். இவை ரத்த ஓட்டத்தின் மூலம் பிற பகுதிகளுக்கு பரவும் முன்னரே இவற்றை இனம் கண்டுபிடிப்பதன் மூலம் எண்ணற்ற மக்களின் உயிரைக் காக்க இந்த வேகத்தடை கருவி உதவும் என்கிறார் மாணவர் பெர்னேட்!
அது சரி, இந்த வேகத்தடை கருவியை வைத்துக் கொண்டு புற்றணுக்களை எப்படி இனம் கண்டு கொள்வது?
இந்த மைக்ரோ ப்ளூயிடிக் கருவியின் உள்ளே வெவ்வேறு உயரங்கள் கொண்ட வேகத்தடை போன்ற வடிவமுள்ள பொருட்கள் கோணலாக வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீது உயிரணுக்கள் மற்றும் இதர பொருட்கள் கலந்த திரவத்தை ஓடவிடும்போது இலகுவான பொருட்கள் போல கனமான பொருட்களால் இந்த வேகத்தடையை கடந்து செல்ல முடியாது.
வேகத்தடையை கடந்து செல்ல முடியாத அத்தகைய பொருட்கள் தங்கள் திசையை மாற்றிக்கொண்டு கோணலாக வைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் திசையிலேயே பயணிக்கத் தொடங்குகின்றன. இந்த நிகழ்வு தொடரத் தொடர, இறுதியில் வெவ்வேறு கனமுள்ள, அளவுள்ள பொருட்கள் வேவ்வேறு திசையில் செல்வதன் மூலம் சுலபமாக பிரிக்கப்படுகின்றன என்கிறார் பெர்னேட்.
இந்த கருவியிலுள்ள வேகத்தடையை கடந்து செல்ல முற்படும் பொருட்களின் வேகத்தை குறைக்க புவி ஈர்ப்பு விசை மட்டுமல்லாது வேறு யுக்திகளும் கையாளப்படுகின்றன. உதாரணமாக, மின்சார சக்தி அல்லது காந்த சக்தி உடைய பொருட்கள் மின்சாரம் அல்லது காந்த சக்தி செலுத்தப்பட்ட ஒரு சூழலில் வேகத்தடையை கடந்து செல்வது கடினம். இதனால், காந்த சக்தி செலுத்தப்பட்ட ஒரு கருவியில் காந்த மணிகளைக் கொண்டு புற்றணுக்களை கவர்ந்து பின்னர் அவற்றை இனம் பிரித்து விட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.
மைக்ரோ மற்றும் நானோ அளவுள்ள நுண்ணிய பொருட்களை இனம் கண்டு பிரிக்கும் திறன் சோலார் சக்தி முதல் உயிர் பாதுகாப்பு வரையிலான பல துறைகள் சார்ந்த தொழிற்சாலைகளுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், இந்த வேகத்தடை கருவியின் உடனடிப் பயன் மருத்துவ பரிசோதனைக் கருவிகள் உருவாக்கத்தில்தான் இருக்கக்கூடும் என்கிறார் ஆய்வு மாணவர் பெர்னேட்.
மொத்த ரத்தத்தையும் அதன் ஒவ்வொரு உருப்படிகளாக சுலபமாக இனம் பிரித்து கொடுத்துவிடும் இந்த வேகத்தடை கருவி காப்புரிமைக்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் புற்றணுக்களை இனம் கண்டு பிரித்துணரக்கூடிய இதன் திறன் காரணமாக உலக மக்களின் உயிரைக் காக்கும் கருவியாக மாறி பயன்படவும் இந்த நுண்ணிய வேகத்தடை கருவி காத்துக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

No comments:

Post a Comment