Friday, 27 July 2012

ஆரோக்கியம் தரும் அபூர்வ கஷாயம்

Posted On July 27,2012,By Muthukumar
"உணவு மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம், நோய்களையும் குணப்படுத்தலாம்'' என்பது சித்த மருத்துவத்தின் தத்துவமாகும். இதனை எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சென்னை அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஆரோக்கிய முகாம்களையும் நடத்தி வருகி றார்கள். முகாம் ஒன்றில் அந்த குழுவை சேர்ந்த டாக்டர் வீரபாபுவை சந்தித்தோம். அவர் தரும் ஆரோக்கிய தகவல்கள்:

 இன்று ஏராளமானவர்கள் சர்க்கரை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சர்க்கரை நோய்க்கு உணவுக் கட்டுப்பாடு மிக அவசியம். சாமை அரிசி, வரகு அரிசி, திணை அரிசி போன்றவற்றில் சாதம் செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் மட்டுமின்றி உடல் பருமனும் குறையும். முதலிலே இந்த சாதத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராமல் தடுத்துவிடலாம்.
 ஆவாரம்பூவை அன்றாடம் பருப்போடு வேக வைத்து சாம்பார் செய்து உண்டு வருவது நல்லது. இதுவும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். உடல் எடையையும் குறைக்கும்.
 முடக்கத்தான் கீரையில் ரசம் தயாரிக்கலாம். தோசை சுட்டு சாப்பிடலாம். சூப் வைத்தும் பருகலாம். இந்த கீரையில் மஞ்சள், சீரகம், பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து அரிசி மாவோடு கலந்து தோசையாக சுட்டு சாப்பிட்டால் மூட்டு வலியே வராது.
 வல்லாரையை தொடர்ந்து உணவில் பயன்படுத்தினால் மூளை மற்றும் நரம்பு மண்டலம் வலுப்பெறும்.
 தூதுவளையை பயன்படுத்தினால், சுவாச மண்டலம் வலுப்பெறும். சளி, இருமல் வராமல் தடுக்கும்.
 பிரண்டையில் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் வருவதை தடுக்க முடியும். நன்றாக பசி எடுக்கும். செரிமானம் ஆகும். இதில் உள்ள இயற்கை கால்சியம் எலும்புக்கு உறுதியைத் தரும்.
 முசுமுசுக்கை இலையை அடையாகவோ, தோசையாகவோ தயாரித்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா தொந்தரவே ஏற்படாது.
 கரிசலாங்கண்ணியில் உள்ள தாமிரச்சத்து புற்றுநோயை எதிர்க்கும் தன்மைகொண்டது. அதனால் கரிசலாங்கண்ணியை உணவில் பயன்படுத்தலாம்.
 சரக்கொன்றை பூவை இடித்து தோசை, சப்பாத்தியில் சேர்க்கலாம். இதுவும் சர்க்கரை நோய், உடல் பருமனை குறைக்கும்.
 வேப்பம் பூவில் ரசம், துவையல் செய்யலாம். இதனால் குடல் பூச்சிகள் அழியும். சர்க்கரை நோய் கட்டுப்படும்.
 கொள்ளுவில் துவையல், ரசம் தயாரிக்கலாம். இதனை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகி, உடல் எடையும் கட்டுக்குள் வரும்.

பொதுவான அறிவுரைகள்:
புதுப்புது நோய்கள் தற்போது உருவாகிக்கொண்டிருக்கின்றன. அவைகள் நம்மை தாக்காமல் இருக்க, நமது அன்றாட உணவில் நமது சுவைக்கேற்ற மூலிகைகளை உணவாக பயன்படுத்தவேண்டும்.
சிக்குன்குனியா, பன்றி காய்ச்சல் போன்றவைகள் பரவும் காலங்களில் வாரம் இருமுறை நிலவேம்பு கஷாயம் பருகினால், மேற்கண்ட நோய்கள் நம்மை அண்டாது. நிலவேம்பு கஷாயமானது, உடல் வலியுடன் கூடிய குளிர் காய்ச்சலுக்கும் நல்ல மருந்து. குறிப்பிட்ட வகை கஷாயங்கள் சென்னை அரசினர் சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படுகின்றது.
நமது மண் சார்ந்த மூலிகை கஷாயங்கள் நமது உடலுக்கு மிகவும் ஏற்றது. பக்கவிளைவுகளும் இல்லாதது'' என்கிறார், டாக்டர் வீரபாபு.

No comments:

Post a Comment