Monday, 5 September 2011

வயிற்றுக் கோளாறை நீக்கும் பிரண்டை !

வயிற்றுக் கோளாறை நீக்கும் பிரண்டை !
Posted On September 5,By Muthukumar,


பிரண்டை நாற்கோண வடிவ தண்டுகளையுடைய ஏறு கொடி இனமாகும். பற்றுக் கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டு இருக்கும். சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். சிவப்பு நிற உருண்டையான சிறிய சதைக் கனி உடையது. கால் அடி முதல் அரை அடி வரை நீளத்தில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது பெண் இனம் என்றும் அரை அடிக்கு மேல் ஓர் அடி வரை நீளவாட்டில் கணுக்கள் அமைந்து இருந்தால் அது ஆண் இனம் என்றும் அறிந்து கொள்ளலாம். இந்தக் கணுக்களில் இருந்தே சுருள் சுருளான விழுதுகள் வெளிப்பட்டு 15 நாளில் முற்றிய இலையாக மாறிவிடும். இது காட்டுப் பகுதிகளிலும் கரடுமுரடான கற்கள் நிறைந்த இடங்களிலும் காணப்படுகின்றன. இதற்கு அதிகமான தண்ணீரோ, ஈரப்பசையோ தேவையில்லை. காற்றில் கலந்திருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வாழும் ஆற்றல் உடையது. குடல் வாயுவை அகற்றுதல், பசியை அதிகப்படுத்துதல், நுண்புழுக்களைக் கொல்லுதல் ஆகிய மருத்துவக் குணங்களைக் கொண்டது.
வேறுபெயர்கள்: கிரண்டை அரிசணி.
வகைகள்: உருட்டை, சதுர வட்டை, முப்பிரண்டை, மூங்கிற்பிரண்டை, கோப்பிரண்டை.
ஆங்கிலப் பெயர்கள்: Cissus quadrangularis, Linn, Vitaceae.
இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்.
பிரண்டையின் விழுது, கணு, மேல்தோல் இவற்றை நீக்கிவிட்டு உள்சதையில் இருக்கும் நரம்புகளையும் தனியாகப் பிரித்து நீக்கிவிட்டு பிரண்டையின் சதைப் பற்றை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, கொத்தமல்லி, மிளகு, புதினா, கொஞ்சம் புளி, இஞ்சி, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு வகைக்குத் தகுந்தாற்போல் எடுத்துச் சுத்தம் செய்து நல்லெண்ணெயில் வதக்கி அரைத்து துவையலாக்கி உண்டுவர நாவறட்சி, பித்தம், கிறுகிறுப்பு குமட்டல், குன்மம், செரிமானக் கோளாறு, வாய்வுத் தொல்லை குணமாகும். பசியைத் தூண்டும்.
பிரண்டைச் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றிட சதைப் பிடிப்பு, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு வீக்கம், எலும்பு முறிவு குணமாகும்.
பிரண்டையை அதிக அளவில் எடுத்து சுத்தம் செய்து நிழலில் காய வைத்து உலர்த்தி தீ வைத்துக் கொளுத்த சாம்பலாகும். இதை எடுத்து அதற்கு 3 பங்கு தண்ணீர் ஊற்றி சுத்தமான பாத்திரத்தில் வைத்து அலச வேண்டும். பின்னர் தும்பு, தூசிகளை நீக்கி விட்டு ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். மறுபடியும் கசடு உள்ள முதல் பாத்திரத்தில் கொஞ்சம் நீரை ஊற்றி மறுபடியும் அலசி நீரை 2வது பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ஒரு நாள் வடித்த நீரை மூடி அசையாமல் வைத்திருந்தால் நீர் தெளிவாகிப் பன்னீர் போல இருக்கும். இந்த நீரை மறுநாள் எடுத்துப் பார்த்தால் தெளிந்திருக்க வேண்டும். அப்போது சரியாக தெளிந்திருக்கவில்லையென்றால் ஏதாவது ஒரே வகையான விறகையோ அல்லது வரட்டியையோ(பருத்தி செடிமார், கம்புத் தட்டை, பசுமா வரட்டி, கருவேலம் மரத்தின் கட்டைகள்) வைத்து சிறு தீயில் எரிக்க தண்ணீர் வற்றச் செய்து மெழுகு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். தீ அதிகமானால் பொங்குவதோடு முறிந்து விடும். மெழுகுபதம் வந்ததும் கவனமாக அதை எடுத்து பீங்கான் கிண்ணத்தில் ஊற்றி அரை நாள் கழித்துப் பார்த்தால் குழம்பு பளிங்குப் பாறையாக வெண்மையான நிறத்தில் மாறி இருக்கும். இதைப் பிரண்டை உப்பு என்று கூறுவர். இதை ஒரு சம்பா அரிசி எடை எடுத்து பசும்பாலிலோ, ஆட்டுப் பாலிலோ, தாய்ப்பாலிலோ கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க நாக்கில் அச்சரம், வாயில் அச்சரம், உதட்டில் வெடிப்பு, புண், வயிற்றில் உள்ள குடல் புண், நுரையீரல் வீக்கம் குணமாகும்.
மிளகு அளவு பிரண்டை உப்பை பசும் வெண்ணெயில் குழைத்து 2 வேளை சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும். இரத்தப் போக்கு, இரத்தம் தடைபடுதல், குத்துக் கடுப்பு குணமாகும்.
குண்டுமணி அளவு பிரண்டை உப்பை எடுத்து 5 சொட்டு நெய்விட்டுக் கலந்து அதைக் கருணைக் கிழங்கு லேகியத்துடன் 2 வேளை உண்டு வர வாய்நாற்றம், மலவாய் அரிப்புடன் கூடிய உள், வெளி மூலங்களினால் சவ்வுகளில் ரத்தக் கசிவு, கம்பு முளைச் சீழ் வடிதல் குணமாகும்.
பிரண்டை உப்பு 2 அரிசி எடை எடுத்து பாலில் கலந்து 3 வேளை குடித்துவர சிறுகுழந்தைகளின் பேதி, வாந்தி, சீதபேதி, நுரைத்த பச்சைப் பேதி நிற்கும்.
பிரண்டை உப்பை 1 குண்டுமணி அளவு நெய் அல்லது வெண்ணெயில் 2 மண்டலம் 2 வேளை சாப்பிட்டு வர சூதகச் சிக்கல், சூதக வலி குணம் ஆகும்.

No comments:

Post a Comment