Friday 30 March 2012

மாற்றம் செய்தால் வலி குறையும்

Posted On March 30,2012,By Muthukumar
பணியாற்றும் தளத்தின் அல்லது மேசையின் மீது (இடுப்பளவு உயரத்தில் இருந்தால்) சாய்ந்தவாறு நிற்பது, மூட்டுகளுக்கு ஓய்வு அளிக்கும். இத்தகைய ஏற்பாடும், நவீன சமையலறைகளில் நின்ற நிலையில் பணியாற்றும் மகளிருக்கும் மிகவும் உகந்ததாக இருக்கும்.
அன்றாட வாழ்க்கை முறைகளிலும், பழக்கவழக்கங்களிலும், சிற்சில எளிய மாறுதல்களை செய்து கொள்வதன் மூலம், மூட்டு வாதத்திற்காக செய்து கொண்ட சிகிச்சைகளின் முழு பலன் மங்காமலும், வலி - உபாதைகள் மீண்டும் தலை தூக்காமலும், தற்காத்துக் கொள்ள முடியும்.
இதில், மிக முக்கியமான மூன்று விஷயங்களைப் பற்றி, இப்போது பார்ப்போம். இம்மூன்று விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம், மூட்டு அழற்சி மீண்டும் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, நோயாளி, தன் அன்றாட அலுவல்களை தங்கு தடையின்றி மேற்கொள்ள முடியும்.
முதலில், முறையான பிசியோதெரபி சிகிச்சைகளை மேற்கொண்டு வலி, வீக்கம், உபாதைகளைக் குறைத்துக் கொண்டபின், பின்வரும் மூன்று குறிப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்று பணிபுரிதல் இது முழங்கால் மூட்டுகளுக்கு மட்டுமின்றி, முதுகெலும்பு மூட்டுகளுக்கும் ஒவ்வாத ஒரு செயல். கூடுமானவரை இத்தகைய பணிகளை அமர்ந்து கொண்டு செய்ய முயற்சிக்கவும். தவிர்க்க இயலாத சூழ்நிலையில், பின்வரும் மாற்று ஏற்பாட்டை செய்து கொள்ளலாம்.
நிற்கும் இடத்தில், 7 - 10 அங்குல உயரத்தில், ஒரு சிறு நாற்காலி அல்லது அதே உயரமுள்ள பலகை அல்லது ஒரு சிமென்ட் தளம் அமைத்து, அதன் மீது பாதங்களை, ஒன்று மாற்றி ஒன்றாக வைத்து நிற்கலாம். அதிகபட்சம், 4 நிமிடங்களுக்கு ஒருமுறை கால்களை மாற்றி நிற்க வேண்டும். இந்த முறையில், மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம் ஓரளவிற்கு குறையும்.
மேலும், பணியாற்றும் தளத்தின் அல்லது மேசையின் மீது (இடுப்பளவு உயரத்தில் இருந்தால்) சாய்ந்தவாறு நிற்பது, மூட்டுகளுக்கு ஓய்வு அளிக்கும். இத்தகைய ஏற்பாடும், நவீன சமையலறைகளில் நின்ற நிலையில் பணியாற்றும் மகளிருக்கும், செவிலியர்கள், தேநீர் விடுதி ஊழியர்கள் மற்றும் இயந்திர ஓட்டுனர்கள் போன்ற, நின்ற நிலையில் பணிபுரிவோருக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.
இதில் பரிதாபத்திற்குரியவர்கள், பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டிருக்கக் கூடிய காவல்துறையினர் மட்டுமே. இவர்கள் தேவையானால், மூட்டு உறைகளை உபயோகிக்கலாம். மாடிப் படிகளில் ஏறி இறங்குதல் மூட்டு பிரச்னை உள்ளவர்கள், இதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். மனித முழங்கால் மூட்டுகளின் அமைப்பு, செயல்பாடுகளை ஆராயும் போது, அவை சமதளத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் நடக்கும்படியான அமைப்பைப் பெற்றுள்ளன.
ஆனால், படிகள் ஏறி இறங்குவதால் ஏற்படும் பாதிப்பை தாங்கும் திறன் மிகவும் குறைவே. தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நோயாளிகள், பின்வரும் அறிவுரையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.படி ஏறும் போது, வலி இல்லாத காலை, முதலில் மேல் படியில் வைத்து, ஒவ்வொரு படியாக ஏற வேண்டும். இறங்கும் போது, வலியுள்ள காலை, முதலில் கீழுள்ள படியில் வைத்து இறங்க வேண்டும். மேலும் படியோர கைப்பிடியை பிடித்து ஏறி இறங்குதல் நலம்.
இவற்றால் மூட்டுகளில் விழும் பளு, வெகுவாக குறைந்து, மூட்டு அழற்சி ஏற்படுவதும் பெருமளவு தவிர்க்கப்படும்.இந்திய வகை கழிவறைகளை உபயோகிப்பதை தவிர்ப்பதால், கால்களை மடக்கி நீட்டும் பழக்கம் போய் விடும் என, பெரும்பாலான நோயாளிகள் கவலைப்படுகின்றனர்.
அவ்வாறு மூட்டுகளை மடக்கி நீட்டுதல் அவசியம் தான். எனினும், கழிவறையில் அமரும் நிலையை பார்க்கும் போது, கால்கள் ஊன்றியிருக்கும் நிலையில், அதாவது பாரம் முழுவதும் சுமக்கும் நிலையில், முழுவதுமாக மடக்க வேண்டியுள்ளதால், மூட்டுகள் அதிகளவில் பிரயாசைப்பட நேருவதாலும், எலும்புகளுக்கு இடைப்பட்ட உராய்வு அதிகரிப்பதாலும் மூட்டுகளில் வலி - வீக்கமும், தேய்மானமும் அதிகரிக்க ஏதுவாகும்.
எனவே, இத்தகைய இந்திய வகை கழிவறைகளை உபயோகிக்கும் போது, வலியை உணர்பவர்கள், கூடுமானவரை மேற்கத்திய வகை கழிவறைகளை உபயோகிப்பதே சாலச் சிறந்தது. மேற்கத்திய கழிவறை வசதியில்லாதவர்கள், இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, மலஜலம் கழிக்கும் ஆசனங்களை வாங்கி உபயோகிக்கலாம். மேற்சொன்ன, இந்த மூன்று விஷயங்களை மனதில் கொண்டு செயல்படுவதன் மூலம், மூட்டு வாதம் உள்ளவர்கள், மீண்டும் வலி வேதனை ஏற்படுவதை பெருமளவு தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment