Saturday 31 March 2012

ஆயுர்வேதம் – அக்னி சரியாக செயல்படவில்லை எனில் அஜீரணம்

Posted On March 31,2012,By Muthukumar
உடலில் ஜீரண சக்தி குன்றினால், எல்லா வியாதிகளும் நம்மைத் தாக்கும். ஜீரண சக்திக்கு, அக்னி என்று பெயர். தீ, எவ்வாறு எல்லாப் பொருட்களையும் சமைக்க வல்லதோ, அவ்வாறே வயிற்றிலுள்ள அக்னியும், நாம் உண்ணும் எல்லா பொருட்களையும் செரிக்கும் தன்மையுடையது. இந்த அக்னி சரியாக செயல்படாதது தான், நோய்களுக்கு அடிப்படைக் காரணம் பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மூலநோய், வயிற்றில் வாயு உப்புசம், வயிற்றுவலி, வயிறு எரிச்சல், ஏப்பம் இப்படி நாம் நாள்தோறும் எதிர்கொள்ளும், பல நோய்கள் ஜீரணக் கோளாறினால் ஏற்படுபவை.
உணவு, உழைப்பு, பழக்க வழக்கங்கள், இவை கட்டுப்பாடு இல்லாததால் ஜீரணசக்தி குன்றி, வாத பித்த கப தோஷங்கள், தம் சமநிலையை விட்டு விலகி, உடலில் நோயை ஏற்படுத்துகின்றன. ஆண்டாள், என்ற பாட்டிக்கு வயது, 75. வெகு நாட்களாக வயிற்றுப் பிரச்னை. ஒரு நாளில், பல முறை வயிற்றுப் போக்கால் அவதிப்படுவார். எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் <உடனே பேதியோடு, இப்படி ஒரு நாளின் மிகுந்த நேரம், கழிப்பறையில் தான் இருப்பார். இந்த வயிற்றுப் போக்குப் பிரச்னையால், அவருக்கு அநேக சிரமங்கள். எதைச் சாப்பிடுவது, எதைத் தள்ளுவது என்று ஒன்றுமே புரியவில்லை.
மருத்துவரின் அறிவுரைப்படி இவர், 2003ல் தன் வயிற்றுப் பிரச்னைக்காக, ஒரு ஸ்கேன் எடுத்தார். அப்போது வயிற்றுப் போக்கிற்கு காரணம், பித்தப்பை கற்களாக இருக்கலாம் என்று கூறினார். இதன் பின்பும் மூன்றாண்டுகள், இந்தப் பித்தப்பை கற்கள் கரையுமோ என்ற எண்ணத்தில், பல மருந்துகளை உட்கொண்டார். ஆனால், இவருக்கு வயிற்றுப் போக்கு நீடித்தது.
பின்பும் மருத்துவரின் பரிந்துரைப்படி, மறுபடியும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தார். இறுதியில், 2006ல் இந்த நோயாளியின், சிறுநீர்ப் பையை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். அறுவை சிகிச்சைக்குப் பின்பும், ஆண்டாள் பாட்டியின் வயிற்றுப் போக்கு தீரவில்லை. இந்த முறை கால் வலியும் சேர்ந்து, அவரை வாட்டியது.
கடந்த, 2007ல் பாட்டி ஆயுர்வேத மருத்துவத்தை நாடினார். இவருக்கு பேதியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளுடன், ஜீரண சக்தியை வளர்க்கும் மருந்துகளும், கலந்து கொடுக்கப்பட்டன. இத்துடன் உடலில் வாயுவின் சீற்றத்தையும் குறைக்க, நெய்மருந்துகளுடன் வைத்தியம் துவங்கியது. தாடிமாஷ்டக சூரணம், அஷ்டாக்ஷரீ குளிகை, ஷட்பலக்ருத தாடிமாதி க்ருதம், பிருஹத்சாகலாத்யாக்ளுதம், பிப்பல்யாஸ சூதமூலாரிஷ்டம் என்ற பற்பல மருந்துகள் மாற்றி மாற்றி வழங்கப்பட்டன.
உணவில் மாதுளை, கடைந்து வெண்ணெயை நீக்கிய மோர், புழுங்கலரிசி வடித்த சாதம், பயித்தம் பருப்பு, புடலங்காய் போன்ற இலகுவான பொருட்களைக் கொண்ட உணவு, உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்.
இந்த ஆயுர்வேத சிகிச்சையில், படிப்படியாக பாட்டியின் வயிற்றுப் போக்கு நின்றது. ஜீரண சக்தி முறையாக வளர்ந்து, சில மாதங்களில் அவர் உடல் நிலை மிகவும் தேறியது. இத்துடன், அவருக்கு வழங்கப்பட்ட தைலங்கள் தேய்த்து, தன் கால் வலியையும் போக்கிக் கொண்டார். உடலுக்கு ஒவ்வாத உணவு, ஒன்றுக்கொன்று முரண்பாடான உணவுகளை உண்பது மலம், சிறுநீர் இவற்றைத் தடைசெய்தல், இரவில் கண் விழிப்பது, நீரை அதிக அளவில் பருகுவது போன்ற காரணங்களினால், நம் உடலில் ஜீரணக் கோளாறுஏற்படலாம்.

No comments:

Post a Comment