Monday 19 March 2012

போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும்..

Posted On March 19,2012,By Muthukumar
ழகு என்பது வேறு, வசீகரம் என்பது வேறு. அழகாக இருக்கும் பலரால் அனை வரையும் வசீகரிக்க முடிவதில்லை. காரணம் அவர்களுடைய பேச்சுத் திறமையின்மை.
கவரும் பேச்சு பலரையும் வசீகரித்து நம்முடைய செயல்பாடுகளில் வெற்றியைத் தரக் கூடியது. தற்போது பெண்கள் வெளியில் சென்று பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு பேச்சாற்றலும், கனிவான அணுகுமுறையும் கைகொடுக்கும்.
அலுவலகமானாலும் சரி, பொது இடமானாலும் சரி பெண்களின் தன்மையான பேச்சால் எப்பேர்பட்ட சிக்கலான விஷயமும் சுலபமாகி விடும். இதற்கு மிகவும் பொறுமையும், பயிற்சியும் தேவை. இன்று பல நிறுவனங்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் இத்தகைய பயிற்சியை அளிக்கின்றன. காரணம் ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் வாடிக்கையாளர்கள் கையில் தான் உள்ளது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது அத்தனை சுலபம் அல்ல. யாருடைய மனநிலை எந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அதற்கு தகுந்தபடி அவர்களை கையாளுவதில்தான் சாமர்த்தியமே உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் வரவேற்பாளர், செயலாளர், விமான பணிப்பெண்கள் போன்ற பணிகளுக்கு பெரும்பாலும் பெண்களையே நிறுவனங்கள் நியமிக்கின்றன. இதற்கு காரணம் அவர்களிடம் வெளிப்படும் மென்மையான, வசீகரமான பேச்சுகள் தான். இயல்பாகவே பெண்கள் பொறுமைசாலிகள். இருப்பினும் சுற்றுச்சூழலும், வேலைப்பளுவும் அவர்களின் பொறுமையை சோதித்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இன்று பல கல்வி நிலையங்களில் பெர்சனாலிட்டி டெவலப்மென்ட், பப்ளிக் ரிலேஷன் போன்ற பயிற்சிகளை கொடுக்கிறார்கள். இந்த பயிற்சிகள் ஒருவரை வசீகர தகுதி உடைய புது மனிதராக மாற்றுகிறது. அது அவர்கள் தங்கள் பணிகளில் மென்மேலும் உயர வழி வகுக்கிறது. அழகால் சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்க முடிகிறது. போர்க்கள சூழலை ஒரு புன்னகை மாற்றும் என்பது உண்மை.
முக அழகிற்கு பல அழகு சாதனங்கள் உள்ளன. அழகான பேச்சுக்காக எந்த சாதனமும் இல்லை. ஆனால் நம்மை நாமே அழகுபடுத்திக் கொள்ள இந்த பேச்சு ஒரு சாதனமாக அமைகிறது. இது அனைவருக்கும் கடவுள் கொடுத்த வரம். இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பதட்டமான நேரத்தில், ஒரு சிக்கலை சமாளிக்க தேவையற்ற பேச்சுகளை பேசக்கூடாது. அந்த சூழலில் நாம் கையாளும் தன்மையான பேச்சு அந்த பதட்டத்தை குறைத்து சூழ்நிலையை நமக்கு சாதகமாக்கவேண்டும். இதில் தான் நம் வாழ்க்கையின் வெற்றியே அடங்கி உள்ளது. "பொறுத்தார் பூமி ஆள்வார்'' என்ற பழமொழி இப்படி வந்ததே.
தன்மையான பேச்சுக்கு ஒரு சக்தியிருக்கிறது. அது அனைவரையும் உங்கள் வசப்படுத்தும். மேலும் அவ்வாறு கனிவாக பேசுவது நற்குணமும், சிறந்த பண்பும் ஆகும். நம்முடைய வார்த்தை பலரால் மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இத்தகைய வசீகர பேச்சை கையாளலாம். கண்டிப்பில் திருத்த முடியாத குழந்தைகளைக் கூட தன்மையான பேச்சால் திருத்தி விடலாம். அப்படி நமக்குள் வசப்படும் கனிவும் பணிவும் காலப்போக்கில் நம் ஆன்மாவை பலப்படுத்தும். தன்னம்பிக்கையை வளர்க்கும்.
உங்கள் வீட்டுக்குழந்தைகள் மற்றவர்களிடமும் அன்பாக பேச வேண்டும். அவர்களின் அன்பான அந்த அணுகுமுறை உங்கள் குடும்பத்தின் மீது மற்றவர்களும் மரியாதை செலுத்த காரணமாக அமைந்திடும். குழந்தைப் பருவத்திலேயே நல்ல வார்த்தைகளை கற்றுக் கொடுத்து வருங்காலத்தில் அவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அது அவர்களின் வாழ்க்கையை வெற்றியடையச் செய்யும். நல்ல பேச்சுத்தான் குழந்தைகள் கற்க வேண்டிய முதல் கல்வி.
நாம் பேசுவது நியாயமாக இருக்கும். ஆனால் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டால் அந்த நியாயம் ஏற்றுக் கொள்ளப்படாமல் போகும். நாம் பேசுவது நியாயமானது என்பதற்காக நம்முடைய கடுமையான வார்த்தைகளை யாரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். நல்ல வார்த்தைகள் நம்மை அழகாக மற்றவர்களுக்கு காட்டும். நம்முடைய புறத்தோற்ற அழகு சாதிக்காத ஒன்றை தன்மையான வார்த்தைகள் சாதிக்கும். எதிரியை நண்பனாக்குவதும், நண்பனை எதிரியாக்குவதும் வார்த்தைகள்தான்.
குடும்ப உறவுகளை காப்பாற்றுவது மென்மையான வார்த்தைகள் தான். பொறுமையை கடைபிடிக்கத் தெரியாதவர்கள் உறவுகளை இழக்க வேண்டியிருக்கும். நாம் பொறுமை இழந்து பேசுவது நம் சிக்கல்
களுக்கு தீர்வு அல்ல. அத்தகைய பேச்சு சிக்கலை மேலும் பெரிதாக்கி விடும். எனவே நாம் ஒரு விஷயத்தை பேசுவதற்கு முன் பலமுறை யோசித்து பேச வேண்டும். மற்றவர்கள் மனம் புண்படும்படியான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. பேசிய பின்பு மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவும் கூடாது.
தன்மையாக பேசினால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். தன்மையான பேச்சே உங்களிடம் நிரந்தரமானால், நண்பர்கள் மத்தியில் நீங்கள் கதாநாயகன் ஆகிவிடுவீர்கள்.

No comments:

Post a Comment