Posted On March 8,2012,By Muthukumar
![]()
நமது விண்வெளி மண்டலத்துக்கு `பால் வீதி' என்று பெயர் சூட்டியிருப்பது ரொம்பப் பொருத்தம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதிகாலைப் பனி போலவே நமது `பால் மண்டலம்' `பளிச்' வெண்மையில் திகழ்கிறதாம்.
பால் வீதி நிறம் பற்றிய உறுதியான தகவல் களைத் தெரிவித்திருப்பவர்கள் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள். நாம், அதாவது நமது பூமி, பால் மண்டலத்தின் மத்தியில் அமைந்திருக்கிறது. எனவே இப்பகுதியின் நிறத்தை துல்லியமாக நிர்ணயிப்பது இதற்கு முன்பு கடினமாக இருந்தது.
எந்த ஒரு நட்சத்திர மண்டலத்தின் நிறத்தை அறிவதும் முக்கியமான விஷயம். அதுதான் அந்த மண்டலம் தோன்றிய வரலாறு, நட்சத்திர உருவாக்கம் போன்ற விஷயங்களை விளக்கும்.
நமது பூமி, பால் மண்டலத்தின் நடுவில் அமைந்திருப்பதால், இம்மண்டலத்தில் நெருக்கமாக உள்ள பகுதிகளைத் தவிர பிற பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடிவதில்லை. வாயு மேகங்கள், தூசிகள் போன்றவை மறைப்பதே காரணம்.
``பால் மண்டலம், 1 லட்சம் ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது. ஆனால் நம்மால் எந்த திசையிலும் ஆயிரத்தில் இருந்து இரண்டாயிரம் ஒளியாண்டுகள் தொலைவுக்குத்தான் பார்க்க முடிகிறது'' என்கிறார், மேற்கண்ட ஆய்வில் ஈடுபட்ட பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் ஜெப்ரி நியூமேன்.
``பால் மண்டலத்தின் நிறத்தைக் கண்டுபிடிப்பது, நமது உலகம் ஒட்டுமொத்தமாக எவ்வாறு காட்சியளிக்கும் என்று துல்லியமாக நிர்ணயிப்பதைப் போல கடினமானது. பென்சில்வேனியா போன்ற ஒரு குறிப்பிட்ட பகுதி எவ்வாறு காட்சியளிக்கும் என்றுதான் நம்மால் கூற முடியும்'' என்கிறார் இவர்.
எனவே பால் மண்டலத்துக்கு அருகில் உள்ள பிற நட்சத்திர மண்டலங்களை அறிவியல்ரீதியாக ஒப்பிட்டு, அதன் மூலம் பால் மண்டலத்தின் நிறத்தை பிட்ஸ்பர்க் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் இம்மண்டலம், இதுவரை நாம் கருதி வந்ததை விடவும் கொஞ்சம் பிரகாசம் குறைவாகவும் இருக்கிறதாம்.
|
No comments:
Post a Comment