Thursday 26 January 2012

முன்னதாகவே புற்றுநோயை கண்டுபிடிக்கும் கருவி

Posted On Jan 26,2012,By Muthukumar
நம் உடலிலுள்ள பல கோடி உயிரணுக்கள் ஒவ்வொன்றுக்கு உள்ளேயும் மிக மிக நுண்ணிய பகுதிகள் கொண்ட ஒரு அழகிய உலகம் உண்டு. `டி.என்.ஏ.' என்னும் மரபுப்பொருள்தான் இந்த அழகிய உலகின் ஆதார சுருதி!
இந்த டி.என்.ஏ.வில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்கள் பல வருடங்கள் கழித்து புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை தோற்றுவிக்கலாம். இத்தகைய மாற்றங்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து விட்டால், புற்றுநோய் மற்றும் அல்சீமர்ஸ் போன்ற நோய்கள் நம்மை தாக்கும் முன்பே பாதுகாத்துக் கொள்ளலாம்.
புற்றுநோய் போன்ற நோய்கள் முழுமையாக உடலை ஆட்கொள்ளும் முன்பு நம் உயிரணுக்களில் மூலக்கூறு அளவிலான பல வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உதாரணமாக, டி.என்.ஏ மற்றும் புரதங்களாலான `க்ரொமாட்டின்' எனும் ஒரு மூலக்கூறு டி.என்.ஏ.வை உயிரணுக்களிலுள்ள நியூக்ளியஸ் என்னும் மையப்பகுதிக்குள் பொருத்து கிறது. புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளாலான கார்சினோஜென்கள் மற்றும் அல்ட்ராவயலட் கதிர்கள் ஆகிய இரண்டும் இந்த க்ரொமாட்டின் மூலக்கூறில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
புற்றுநோய் உபாதைகள் ஏற்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்பே க்ரொமாட்டினில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆனால் இந்த மாற்றங்களை தொடக்கத்திலேயே கண்டறியும் வசதி இதுவரை இல்லை.
ஏனென்றால் க்ரொமாட்டினில் ஏற்படும் மாற்றங்களின் அளவு வெறும் 400 நானோ மீட்டர்களே. (ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் 100 கோடியில் ஒரு பகுதி). இது ஒரு சாதாரண நுண்ணோக்கியில் (மைக்ராஸ்கோப்) பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளத்தை விட சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒளியின் அலைநீளத்தைவிட சிறிய க்ரொமாட்டின் மாற்றங்களை, ஒரு சாதாரண மைக்ராஸ்கோப் மூலமாக பார்க்கும்போது அவற்றை துல்லியமாக இனம்கண்டு கொள்வது சாத்தியமில்லை. மாறாக, அவை ஒரு தெளிவற்ற புள்ளியாகவே தோன்றும் என்கிறார் அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தின் மூத்த ஆய்வாளர் வாடிம் பாக்மேன்.
இந்த தெளிவற்ற புள்ளியிலுள்ள க்ரொமாட்டின் மாற்றங்களை துல்லியமாக கண்டறிய, `பார்ஷியல் வேவ் ஸ்பெக்ட்ராஸ்கோபிக் மைக்ராஸ்கோபி' (Partial Wave Spectroscopic (PWS) Microscopy) என்னும் புதிய வகை நுண்ணோக்கி தொழில்நுட்பத்தின் உதவியை நாடினார் ஆய்வாளர் வாடிம் பாக்மேன். இந்த நவீன நுண்ணோக்கி ஒரு ஒளிக்கற்றை, உயிரணுவை எப்படி எதிர்கொள்கிறது என்பதை காண உதவுகிறது. ஒளிக்கற்றையானது ஒரு உயிரணுவினுள் பயணிக்கும் போது அதனுள் இருக்கும் நுண்ணிய பகுதிகளை அவற்றின் அடர்த்தியின் அடிப்படையில் பிரதிபலிக்கிறது. அவ்வாறு பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டு உயிரணுவினுள் இருக்கும் நானோ அளவிலான பகுதிகள் மறுகட்டமைப்பு செய்யப்படுகின்றன.
நவீன நுண்ணோக்கி, க்ரொமாட்டின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கணக்கிடக்கூடியது. எனினும் பாக் மேன், நுரையீரல், பெருங்குடல், கணையம், சினைப்பை மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலிலுள்ள ஆரோக்கியமான உயிரணுக்களிலுள்ள க்ரொமாட்டின் அடர்த்திகள் வழக்கத்துக்கு மாறாக, வித்தியாசமாக இருக்கின்றன என்கிறார். இத்தகைய க்ரொமாட்டின் அடர்த்தி வித்தியாசங்கள் புற்றுநோயால் பாதிக்கப்படாதவர்களின் உயிரணுக்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய க்ரொமாட்டின் மாற்றங்களை கண்டறிவது மிகவும் எளிது. ஏனென்றால், இவ்வகை மாற்றங்கள் ஆரோக்கியமான மற்றும் எதிர்காலத்தில் புற்றுநோய் உயிரணுவாக மாறவிருக்கும் உயிரணுக்கள் என இரண்டிலும் ஏற்படக்கூடியவை.
நவீன நுண்ணோக்கியை பயன்படுத்தி, தாடையின் உட் புறமிருக்கும் உயிரணுக்களை பரிசோதனை செய்து, புகைப் பழக்கம் உள்ள 135 பேரில் எத்தனை பேருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது, எத்தனை பேருக்கு இல்லை என்பதை கண்டறிந்திருக்கிறார் பாக்மேன்.
இந்த PWS நுண்ணோக்கி மிகவும் நவீனமானது, நம்பிக்கையானதும்கூட என்கிறார், ஆரோக்கியமான மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் உயிரணுக் களுக்கிடையிலான வித்தியாசங்களை அட்டாமிக் ஃபோர்ஸ் மைக்ராஸ்கோபி (Atomic Force Microscopy) என்னும் மற்றுமோர் நானோ நுண்ணோக்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்திவரும் அமெரிக்காவின் க்ளார்க்சன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஐகோர் சொகோலோவ்.
உயிரணுவின் உள்ளே சஞ்சரித்து அங்கே இருக்கும் நானோ அளவிலான நுண்ணிய பகுதிகளை துல்லியமாக வடிவமைக்க உதவும் எல்லா தொழில்நுட்பங்களும் நோய்களை கண்டறிவதற்கும், அவற்றை முழுமையாக புரிந்துகொள்வதற்கும் மிகவும் பயனுள்ளவை என்கிறார்கள் நானோ தொழில்நுட்ப ஆய்வாளர்கள்.

No comments:

Post a Comment