Saturday 28 January 2012

டெங்கு ஜுரத்தை ஒழிக்கும் மரபணு மாற்ற கொசு!

Posted On Jan 28,2012,By Muthukumar


மலேரியா, யானைக் கால் நோய், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் உருவாகக் காரணமானவை கொசுக்கள்.
கொசுக்களால் உண்டாகும் ஆபத்தான நோய்களுள் முக்கியமானது டெங்கு ஜுரம். வருடம் ஒன்றுக்கு 5 கோடி முதல் 10 கோடி மக்கள் வரை டெங்கு ஜுரத்துக்கு பலியாகிறார்கள் என்று அதிர்ச்சியூட்டுகிறது சமீபத்திய புள்ளி விவரம். ஆனால், டெங்கு ஜுரத்துக்கு தடுப்பூசியோ அல்லது மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மேலும் அதிர்ச்சியான செய்தி.
டெங்கு ஜுரத்துக்கு பலியாகாமல் தப்பித்துக்கொள்ள தற்போது இருக்கும் ஒரே வழி, இதற்கு காரணமான கொசுக்களை ஒழித்துக்கட்டுவது. ஆனால் கொசுக்களோ, `டெங்குவுக்கு முன்னாடி நாங்க பரப்புன மலேரியாவுக்கே நீங்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கல, நீங்க எங்க எங்களை ஒழிச்சுக்கட்ட போறீங்க. போங்கப்பா போங்க, எங்கள ஒழிச்சுக்கட்ட முயற்சி பண்றத விட்டுட்டு போய் பொழப்ப பாருங்கப்பா' என்பது போல தெனாவெட்டாக, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதிய புதிய நோய்களை பரப்பிக்கொண்டு இருக்கின்றன.
இது ஒருபுறமிருக்க, கொசுக்கள் பரப்பும் உயிர்க்கொல்லி நோய்களை குணப்படுத்துவதா, அல்லது இந்த நோய்களை பரப்பும் அந்த கொசுக்களை ஒழித்துக்கட்டுவதா என்று விழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்களும் மருத்துவர்களும். இப்படிப்பட்ட சூழலில்தான், கொசுக்களை ஒழித்துக்கட்ட ஒரு புதிய மரபணு மாற்ற யுக்தியை கண்டுபிடித்துவிட்டோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் இங்கிலாந்து நாட்டின் ஆக்சிடெக் என்னும் நிறுவன ஆய்வாளர்கள்.
`தன் கைகளைக் கொண்டு தன் கண்களையே குத்திக்கொள்வது போல' என்றொரு பழமொழி உண்டு. கொசுக்களை ஒழித்துக்கட்டும் புதிய மரபணு மாற்ற யுக்தியில் இந்த பழமொழிதான் உண்மையாகி இருக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட வேதியியல் பொருளை உணவாக கொடுக்காவிட்டால் இறந்து போகும் வண்ணம் கொசுக்களில் மரபணு மாற்றம் செய்து, மரபணு மாற்ற கொசுக்கள் உருவாக்கப்பட்டன.
இந்த கொசுக்கள் புழுவாக இருக்கும் வரை, குறிப்பிட்ட அந்த வேதியியல் பொருள் உணவாக கொடுக்கப்பட்டு சோதனைக்கூடத்தில் வளர்க்கப்படும். வளர்ந்த பின்னர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் சுற்றுச்சூழலுக்குள் விடப்படும். இக்கொசுக்கள் சுற்றுச்சூழலிலுள்ள சாதாரண பெண் கொசுக்களுடன் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து, அதனால் உருவாகும் சந்ததிகள் எல்லாம், குறிப்பிட்ட அந்த வேதியியல் பொருள் உணவு இல்லாமல் இறந்து போகும். இதனால் காலப்போக்கில் கொசுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துபோகும்.
இந்த ஆய்வு தொடர்பான சோதனையில், சுமார் 33 லட்சம் கொசுக்கள் சுற்றுச்சூழலுக்கு விடப்பட்டபோது, மொத்த கொசுக்களின் எண்ணிக்கையில் 80 சதவீதம் குறைந்துபோயின. ஆனால், கொசுக்களை ஒழித்துக்கட்ட மேற்கொள்ளப்பட்ட இதற்கு முந்தைய பல முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, காய்கறி மற்றும் பழங்களை சேதம் செய்யும் பழப்பூச்சிகளை கட்டுப்படுத்த, அந்த பூச்சி களிலுள்ள ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகள் செயலிழக்கம் செய்யப்பட்டு சுற்றுச்சூழலுக்கு விடப்பட்டன. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு அவை அழிந்துபோயின. ஆனால் இதே யுக்தியை கொசுக்களில் பயன்படுத்தியபோது தோல்விதான் கிட்டியது. காரணம், இனப்பெருக்க உறுப்புகள் செயலிழக்கம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் எல்லாம் உடல் பலவீனப்பட்டு, சாதாரண கொசுக்களுடன் இணைந்து இனப்பெருக்கம் செய்யமுடியாமல் போனது. இதனால் கொசுக்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமுமில்லை.
கொசுக்களைக் கொண்டே கொசு இனத்தை அழிக்க உதவும் இந்த மரபணு மாற்ற யுக்தி, டெங்குவால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் பாவம் இந்த கொசுக்கள், தங்கள் இனத்தையே அழிக்கப்போகும், ஆனால் தங்களுக்குள்ளேயே இருக்கும் கருப்பாடான, மரபணு மாற்ற கொசுக்களை பற்றி தெரியாமலேயே அவற்றுடன் கூடி, குடியும் குடித் தனமுமாக இருந்துவிட்டு மடிந்துபோகின்றன. எப்படியோ, டெங்குவுக்கு ஒரு தீர்வு கிடைத்தால் சரிதானே?

No comments:

Post a Comment