Friday 2 March 2012

சர்க்கரையும் சாராயம் போன்றதே!

Posted On March 2,2012,By Muthukumar

சர்க்கரையும் சாராயம் (ஆல்கஹால்) போன்று உடம்புக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே. எனவே மதுபானத்தைப் போல சர்க்கரை அளவுக்கும் அரசுகள் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ராபர்ட் லஸ்டிக் தலைமையிலான குழு இவ்வாறு குரல் கொடுக்கிறது.
இவர்கள் கூறுகையில், ``சர்க்கரையானது, அதிகப் பருமன், இதய நோய், புற்றுநோய், ஈரல் பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. எனவே சர்க்கரை விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் புகையிலை, மதுபானம் போல இதற்கும் வரி, கட்டுப்பாடு விதிக்க வேண்டும்'' என்கிறார்கள். அதேநேரம், சர்க்கரைக்கான தேவையையும், விநியோகத்தையும் குறைப்பது மலை போலக் கடுமையான விஷயம்தான் என்றும் இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
பொதுநலத்தைக் கருத்தில் கொண்டுதான், பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை, குறிப்பிட்ட வயதுக்குக் கீழே மதுபானம் அருந்தத் தடை, பொது இடங்களில் ஆணுறை வழங்கும் எந்திரம் போன்றவற்றை அரசாங்கங்கள் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சர்க்கரை விஷயத்திலும் நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சர்க்கரையின் பல்வேறு வகைகளான, சுக்ரோஸ், பிரக்டோஸ், ஏன், குளுக்கோஸ் மற்றும் கரும்பிலிருந்து தயாரிக்கும் சர்க்கரையும் கூட புகையிலை, மதுபானம் அளவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்கிறார்கள்.
அமெரிக்காவில் மட்டும் மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் உரிய எடையை விட அதிக எடை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பாதிப் பேர், அளவுக்கு மிக அதிகமான எடையால் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சர்க்கரை ஒரு முக்கியக் காரணமாகத் திகழ்வதாக மேற்கண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சர்க்கரை, உடம்புக்கு அதிகமான தீங்கை ஏற்படுத்தும் என்பதை சில ஆய்வாளர்கள் ஏற்க மறுத்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment