Wednesday 11 January 2012

கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.. மரத்தூள் அடுப்பு..

Posted On Jan 11,2012,By Muthukumar

 பொங்கல் வைக்க அம்மா குயவர் வீட்டுக்கு பானை வாங்க செல்லும் போது, பானை மட்டும் வாங்காமல் கீரை கடையும் சட்டி, அடுப்பு ,சட்டியை மூட மண் தட்டு என்று பல மண்ணால் செய்யப்பட்ட பொருட்களை நானும் அம்மாவும் வாங்கி வருவோம்.. அதில் முக்கியமானது  மரத்தூள் அடுப்பு..


அது என்ன மரத்தூள் அடுப்பு... மரம் அறுக்கு இழைப்புளி பட்டறைக்கு போய் தூளாக கிடக்கும் மரத்தூளை ஒரு பெரிய சாக்கு மூட்டையில் கட்டி வாங்கி வருவோம்..

மரத்தூள் அடுப்பில் அப்படியே.. வரட்டி மற்றும் சுள்ளிகளை வைத்து எரிய வைக்கலாம்..ஆனால் மரத்தூள் போட்டு கிடித்து எரிய விட்டால் நின்று எரியும்...நிறைய சமையல் வேலைகள் செய்ய முடியும்...
அடுப்புக்கு தேவையான மரத்தூள் முறத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்...   

அதன் மேல் தண்ணீர் லைட்டாக தெளிக்க வேண்டும்... மரத்தூள் அடுப்பில் நடுவில் பீர்பாட்டிலை அல்லது கிசான் பாட்டிலை நடுவில் வைத்து விட்டு, அடுப்பின் வாய்புறத்துக்கும்  நடுவில் இருக்கும் பீர் பாட்டிலுக்கும் ஒரு சின்ன பாட்டில் வைத்து தண்ணீர் தெளித்து லைட்டாக ஈரமாக பிசைந்து வைத்த, மரத்தூளை எடுத்து பாட்டிலை சுற்றி மரத்தூளை கொட்டி கீரை கடையும் மத்தின் பின்புறத்தால் நன்றாக கிடிக்க வேண்டும்..

கிடிக்க கிடிக்க நன்றாக இருகும்...இருகிய பின் வாய்புறம் இருக்கும் பாட்டிலையும் பீர் பாட்டிலையும்.. அலுங்காமல் குலுங்காமல், மரத்தூளால் அடுப்பில் கடடிய இன்ஸ்டென்ட் கட்டிடத்தை இடிக்காமல் பாட்டிலை எடுக்க வேண்டும்...

சவுக்கு விறகை இரண்டாக அதையே நான்காக எட்டாக பிளந்து சின்ன சுள்ளி போல் ஆக்கி கொள்ள வேண்டும்..
 சின்ன வரட்டியில் மரண்ணெய்(மண்ணெண்னையை இப்படித்தான் எங்கள் ஊரில்  அழைப்போம்) ஊற்றி தீப்பற்ற வைத்தால் நின்று எரியும்...விறகும் அதிகம் செலவாகாது..

சாப்பாடு,கொழம்பு,பொறியல் என்று எல்லா வேலையையும் அம்மா ஜில்லாக்கத்திரியாக மரத்தூள் அடுப்பில் முடித்து விடுவாள்..

எப்படி  கேஸ் அடுப்பில் தீ பாத்திரத்தின் நடுப்பகுதியில் தீ விழுகின்றதோ? அது போல மரத்தூள் அடுப்பில் பாத்திரத்தின் சென்டரில் விழும் அதனால் குறைந்த விறகில் நிறைய வேலைகள் செய்யலாம்.. இதில் சப்போர்ட்டிங் ஆக்டர் போல மரத்தூள் செயல்படும்...
 

எனக்கு மரத்தூள் அடுப்பில் பிடித்த விஷயம் என்னவென்றால் பார்த்து பார்த்து கட்டிய மினியேட்சர் செட்டை, சினிமா ஷுட்டிங்கில் வெடிவைத்து தகர்க்க படுவது போல....மரத்தூள் நன்கு எரிந்த பிறகு அந்த எரிந்த கனன்று இருக்கும் சாம்பல் பொடுக்கென்று விழுந்து விடும்...அது விழுவதை கவனிப்பது எனக்கு வேடிக்கையான விஷயம்..

பொதுவாக சமையல் வேலைகள் முடிக்கவும்... அந்த மரத்தூள் சாம்ராஜ்யம் அழியவும் நேரம் சரியாக இருக்கும்.. உடனே அம்மா சின்ன தேக்சாவில் சுடத்தண்ணி போட்டு விடுவாள்...கொஞ்சம் நெருப்பையும் வீணாவதை அவள் விரும்புவதில்லை..

சமையல்  செய்யும் போது அடுப்பு பக்கத்திலே உட்கார்ந்து கொண்டே இருக்கவேண்டும்.. அடுப்பு எரிந்தால்தான் வேலை சீக்கரம் முடியும்.. ஒரு போதும் பால் காய்ச்சும் போது பொங்கி,  என் அம்மா சமைத்த அடுப்பில் வழிந்ததே இல்லை..

அடுப்பை சுற்றி காய்கறி, புளிக்கரைப்பது,அஞ்சறை பெட்டி, போன்ற சின்ன சின்ன பாத்திரங்கள் என்று கைக்கெட்டு தூரத்தில் எல்லாம் இருக்கும்... அம்மா புளி கரைத்து, காய் கறி நறுக்கிக்கொண்டே அடுப்பை எரிய வைத்துக்கொண்டு இருப்பாள்...அடுப்பின் வெம்மையில் அம்மா  வேர்வையோடு  வேலை செய்து கொண்டு இருப்பாள்..

அது என்னவோ எனக்கு சமையல் செய்வது என்றால் எட்டிக்காய் கசப்பு..சில ஆண்கள் விரும்பி சமைப்பார்கள். எனக்கு சமைப்பது பிரச்சனை இல்லை .. ஆனால் அதுக்கு பிறகு பாத்திரம் கழுவி வைப்பதற்கு பதில் இருபது ரூபாய்க்கு இட்லி வாங்கி மூன்று வகை சட்னியோடு சாப்பிட்டு விடலாம் என்பது எனது எண்ணம்..


தானே புயல் அன்று  மனைவி லேட்டாக எழுந்த காரணத்தால் சமைக்காமல் வேலைக்கு சென்று விட்டார்.. வெளியே மழை ... வெளியே செல்ல முடியாத சூழல்....

குக்கரில் ஒரு இன்சுக்கு அடிப்பகுதியில் தண்ணீர் வைத்து, ஒன்றரை டம்ளர் அரிசியை தண்ணீரில் கழுவி,அலசி, மூன்று டம்ளர் தண்ணீரில் அரிசியை மூழ்கடித்து குக்கரில் வெயிட் போட்டு விட்டு வந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தேன்..

ஐந்து விசிலுக்கு பிறகு பொல பொலவென சாப்பாடு ரெடி....ஆனால் அம்மா அடுப்பை நன்றாக எரிக்க  வைக்க பத்து நிமிடத்துக்கு மேல் போராடி, அடுப்பு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அதை தாஜா செய்து கொண்டே எரிய வைத்துக்கொண்டு எங்கேயும் நகராமல் குத்துக்கால் போட்டு உட்காந்து கொண்டு சாதம் தேக்சாவில் பொங்கியதும், இரண்டு சாத பருக்கை எடுத்து வெந்து விட்டதா என்று  விரலால் அரியை நசுக்கி பார்த்து விட்டு, சட்டியில் சாதத்த்தின் கஞ்சியை வடிக்க வேண்டும்...


நீராவி கையில் படாமல் பார்த்துக்கொள்வதும் கஞ்சி வடியும் போது சாப்பாடு கஞ்சி சட்டியில் கவுந்து கொள்ளாமல் இருப்பது போல சாதத்தை வடிப்பதும்தான் அதன் டேலன்ட்டே..


கேஸ் அடுப்பும்,ஐந்து விசிலில்  சாப்பாடு பொல பொலவென நோவாமல்  நோம்பு குளிக்கும் தொழில் நுட்பம் அறியாமலேயே என் அம்மா செத்து போய் விட்டாள்..ஒரு வேளை ஐந்து விசிலில் சாப்பாடு ரெடியாகும் தொழில்நுட்பம் அவள் அறிந்து இருந்தால்...?அவளுக்கு நன்றாக தையல் தெரியும்..தமிழ்நாட்டில் பெரிய காஸ்ட்யூம் டிசைனராக வந்து இருக்கலாம்... யார் கண்டா??? பெரும்பாலும் கிராமத்து பெண்களுக்கு விறகு அடுப்பும், சமையல் மட்டுமே வாழ்க்கை என்று பழக்கி வைக்கின்றார்கள்.. பல  பெற்றோர்...இனி வருங்காலங்களில் மெல்ல அந்த நிலை மாறினால் சந்தோஷமே..

எவ்வளவு தேடியும் மரத்தூள் அடுப்பு புகைபடங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை.. அதனால சில அடுப்பு படங்கள்.. ஒன்று ஓவியர் இளையராஜா  வரைந்த ஓவியம் என்று நினைக்கின்றேன்.



2 comments:

  1. ஆம்.பெண்கள் படித்து வேலைக்கு சென்றதால் குடும்பத்திற்கு நல்ல உணவு கிடைப்பதில்லை..ஆனால் ஒரு மகிழ்ச்சி பல ஆண்களின் கொட்டம் அடங்கி இருக்கிறது

    ReplyDelete