Saturday, 26 July 2014

பிளீச்சிங், ஃபேஷியல் எது பெஸ்ட்?


‘பிளீச்சிங், ஃபேஷியல் செய்து கொள்வதால் என்ன பலன், இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’ என்று, பிரபல நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் அழகுக்கலை நிபுணர் வீணாவிடம் கேட்டோம். 
”வயது என்பது கூடிக்கொண்டேதான் இருக்கும். ஆனால், நம் உடலையும், உள்ளத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால்தான் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒருவரைப் பார்க்கும்போது அவரது முகத் தோற்றம்தான் எப்போதும் நம் கண் முன் நிற்கும். இப்படி, ஒருவரின் மனதில் பதியும் முகத்தில் மாசு மரு, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருப்பது ஒன்றே இளமையான தோற்றத்துக்கு வழி. முக அழகைக் கூட்டும் பிளீச்சிங், ஃபேஷியல் செய்தால், நம் ஒரிஜினல் அழகைப் பொலிவாகக் காட்டுமே தவிர, வெள்ளையாக மாற்றிவிடும் என நினைப்பது தவறு” என்றவர் ஃபேஷியல், பிளீச்சிங் செய்யும் முறைகளை விளக்கினார்.

பிளீச்சிங்
”பிளீச்சிங் என்பது முழுக்க முழுக்கப் பாதரசம் கலந்த வேதியல் முறையிலான பவுடர்கள் மற்றும் கிரீம்களைக்கொண்டு செய்யப்படுவது.
பிளீச்சிங் செய்ய, முதலில் முகத்தைச் சுத்தமான தண்ணீரால் கழுவி, சருமத்தில் உள்ள அழுக்குகள் எடுக்கப்படும். முகத்துக்கான பிளீச்சிங் பவுடர் மற்றும் ஆக்டிவேட்டர் என்ற கிரீம் சேர்ந்துக் கலந்து, பிரஷ்ஷினால் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவப்படும். 15 நிமிடங்கள் உலர்ந்தவுடன், ஒரு ஸ்பாஞ்சால், ஒற்றி எடுத்துக் கழுவப்படும்.  பிறகு, சன் ஸ்க்ரீன் லோஷன் தடவப்படும். பிளீச்சிங் செய்வதால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீக்கப்படும். இதனால், அதிகம் எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்ட முகத்துக்கு மட்டுமே பிளீச்சிங் செய்யப்படுகிறது. உலர் சருமம் கொண்டவர்கள் செய்துகொள்ளும்போது, முகத்தில் உள்ள தசைகள் சீக்கிரத்தில் தொங்க ஆரம்பித்து வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும். எனவே, உலர்ந்த சருமம்கொண்டவர்கள், பிளீச்சிங் செய்துகொள்ளக் கூடாது.
அதே போல், பிளீச்சிங் செய்துகொள்வதற்கு முன்பு சருமத்தில் ஒவ்வாமை இருக்கிறதா என்பதைக் கண்டறிய முதலில் ‘பேட்ச்’ (patch) டெஸ்ட் செய்யப்படும். பரிசோதனையில் ஒவ்வாமை இருந்தால், பிளீச்சிங் செய்யவே கூடாது. பிளீச்சிங் செய்துகொண்டால், மறுநாள் வரை அதிகம் வெயிலில் போகக் கூடாது. பிளீச்சிங் சிகிச்சையை எடுத்துக்கொள்வதால், முகத்தில் உள்ள கருமை, கரும் புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும். ஆனால், இது தற்காலிகமானதே. ஓரிரு நாட்களில் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி விடும். உடனடியாக ஏதேனும் சுப நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள், மாடலிங் மற்றும் போட்டோ ஷூட் எடுக்கவேண்டியவர்கள் பிளீச்சிங் செய்துகொள்ளலாம். ஆனால், அழற்சியும், முகத்தில் எரிச்சலையும் உண்டாக்கும் என்பதால், அதிகக் கவனம் தேவை. ஆண்கள் ஷேவ் செய்தவுடன் பிளீச்சிங் செய்வதைத் தவிர்த்துவிட வேண்டும்.  வீட்டிலேயே பிளீச்சிங் செய்துகொள்பவர்கள், தோல் மருத்துவர் மற்றும் அழகுக்கலை நிபுணர்களின் ஆலோசனையோடு செய்வது நலம்.
ஃபேஷியல்
”நீண்ட நாட்கள் முகத்தைப் பொலிவாக வைத்திருக்கவும், தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் ஃபேஷியல் துணைபுரிகிறது. ஃபேஷியல் முறையில், கிளென்சிங் (Cleansing ), எக்ஸ்ஃபோலியேஷன் (Exfoliation), ஸ்டீமிங் (Steaming), டோனிங் (Toning), மாஸ்க் (Mask), மாய்ஸ்ச்சரைஸிங் (Moisturizing) என ஆறு படிநிலைகள் உண்டு.

ஃபேஷியல் செய்துகொள்ள, குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் மெதுவாக நீக்கப்படும். பிறகு ‘ஸ்க்ரப்’ பயன்படுத்தி, முகத்தில் உள்ள எண்ணெய்த் துவாரங்களின் வழியாகச் சேரும் அழுக்குகள் அகற்றப்படும். நீராவி பிடித்த பிறகு டோனர் முகத்தில் சேர்க்கப்பட்டு மாஸ்க் போடப்படும்.  இந்த மாஸ்க்கை, பழவகைகள், வாசனைப் பொருட்கள், மூலிகைகள் என விரும்பிய விதத்தில் போட்டுக்கொள்ளலாம். நன்றாக உலர்ந்ததும் மாஸ்க் எடுக்கப்படும். முகம் வறண்டுபோகாமல் இருக்க, முகத்துக்குத் தேவையான ஈரப்பதம் தரப்படும். எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லை என்பதால், எல்லோரும் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.  இதில் உள்ள முக்கியமான அம்சம், முகத்தில் செய்யப்படும் மசாஜ். இதுதான் முகத்துக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது. மேலும் ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. தசைகளை மிருதுவாக மாற்றுகிறது. இதனால் முகத்தில் கூடுதல் பொலிவை உணர முடியும். ஒரு மாதம் முதல் 45 நாட்கள் இடைவெளியில் ஃபேஷியல் செய்துகொள்ளலாம்.
பிளீச்சிங் மற்றும் ஃபேஷியல் முறைகளுக்கு இடையில் முக்கிய வித்தியாசமே, உடனடிப் பொலிவு, நீண்ட நாள் பொலிவு என்பதுதான். பொதுவாகவே உடனடியாகப் பலன் தரும் அனைத்துமே ஆபத்துதான். பிளீச்சிங் செய்துகொள்வதைக் காட்டிலும், ஃபேஷியல் செய்துகொள்வதே முகத்துக்கு சிறந்தது!”
பிளீச்சிங் அபாயம்!

”பிளீச்சிங் செய்யப் பயன்படுத்தப்படும் பிளீச்சிங் பவுடரில் கலக்கப்படும் பாதரசம் சருமத்தினுள் ஊடுருவிச்சென்று ‘மெலனின்’ என்ற நிறமியைத் தந்து சருமத்தை வெளுக்கச் செய்யும். பாதரசம் சேர்க்கப்பட்ட க்ரீம், லோஷன் போன்ற அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, சிறுநீரகம் பாதிக்கப்படுவதுடன் சருமத்தில் பாக்டீரியா பூஞ்சைத் தொற்று ஏற்படும். கூடவே, மன அழுத்தமும் ஏற்பட்டு நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும். நரம்பு மண்டலம், சுவாச மண்டலம், சிறுநீரக மண்டலம் மெல்ல மெல்ல செயல் இழக்கலாம்” என எச்சரிக்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் மாயா வேதமூர்த்தி.

Monday, 7 July 2014

ஆரோக்கியம் தரும் எளிய இயற்கை வைத்தியம்


வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும். புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும். அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம்
ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும். எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும். கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும். எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும். கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும். வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும். 18. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம். வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும். ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.